Tuesday, July 11, 2017

சென்னை நகரிடம் விடை பெறுகிறோம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

இந்த நான்கு  வருடங்களில்  நான்கைந்து தடவை வந்து சென்றேன்.
இந்த நான்கு  வருடங்களில்  நான்கைந்து தடவை வந்து சென்றேன்.
அப்போதெல்லாம்  அனுபவிக்காத  தண்ணீர் கஷ்டம் இந்தத் தடவை முறுக்கி
விட்டுவிட்டது இயல்பான வாழ்க்கையை.

 கிணறு தூர் வாரியும் மஞ்சள் வண்ணத்தில் தான் 
தண்ணீர். சென்னை  மெட்ரோ  உதவியில் சில நாட்கள் ஓடின.
இந்தத்த் தொந்தரவு பொறுக்க முடியாமல் குடும்பத்தில் சில பேற் பிறந்தகலம் சென்றனர். குழந்தைகள் மட்டும் என்னுடன் தங்கினர்.
அவர்களுக்கு எல்லாமே  உத்சாகம்தான்.
குழந்தைகள்  கபடில்லாத அன்பை மனம் கொண்ட அளவு அனுபவித்தேன்.
 பழைய படங்களைச் சேமித்தேன்.

நல்ல நிகழ்வுகள் அல்லாத நிகழ்வுகள் எல்லாம் மனதைப் பக்குவப் படுத்தும் என்றே 
நினைக்கிறேன்.

ஒரு சில நண்பர்களைத் தவிர மற்றவர்களிடம் அளவளாவ முடியவில்லை.
கொடுப்பினை இருந்தால் மீண்டும் சந்திக்கலாம்.
இறைவன்  அனைவரையும் காக்கட்டும்.

Wednesday, June 28, 2017

இனிதாக நிறைவேறிய மகிழ் நிகழ்வு.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டுமகடந்த ஞாயிறு பேரனின் உபநயன பிரும்மோபதேசம்  நிறைவாக நடந்தேறியது.
என் பங்களிப்பு  என்பது  வருபவர்களை  உபசரித்தல் ஒன்றே.
பாலிகை சேர்த்து  கும்மி  அடித்துக் கொண்டாடியதைப் பார்க்க  கூட  நேரம் இல்லை.

பெண்ணின் புகுந்த வீட்டார்,  எங்க  சம்பந்தி  இல்லாத  குறை தெரியாமல்  ,நல்ல ஏற்பாடுகள் செயதிருந்தார்கள். நமக்கு  வேலை  சீர் செய்வது ஒன்றே.  அதை எங்கள் புதல்வரகள் சிறப்பாக  நிறைவேற்றினார்கள்.
ஒரே ஒரு குறை  இணைய நண்பர்களை அழைத்துச் சிறப்பிக்காத து.

இன்னம் ஒரு சந்தர்ப்பம் கிடைக்காமலா  போகும்!அனைவரும் இனிதாக வாழவேண்டும்.

Saturday, June 17, 2017

நிகழ்வுகள்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
நினைவுப்பசுமை.  இந்த மாதக் கடைசியில்  நல்ல நிகழ்வு  பேரனின்  உபநயனம்.  பூர்ததியானதும் அமெரிக்கப் பயணம்.
மீண்டும் பார்க்கலாம்.

Friday, May 26, 2017

ஒரு குழந்தையும் ஒரு தாத்தாவின் மறைவும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

ஏன்பா நீதானே  ஒயிட் ஹேர் இருந்தா உம்மாச்சி அழைச்சுண்டு போவார்னு சொன்ன.
ஆமாம் கண்ணா.
தாத்தா தலைல க்ரே ஹேர் தானே இருக்கு.
உம்மாச்சி சரியாய் பார்க்காம அழைச்சுண்டு போயிடப் போரார்ப்பா.
தாத்தாவைப் பொட்டி யிலிருந்து
எடுத்துடுங்கோ.

Wednesday, May 24, 2017

N.S. Raghavan... நல்ல தம்பி 1950 June 10 May 22 nd 2017

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 அருமை அன்பு,மாண்பு, பக்தி. எல்லாமாக ஒரு உருவம் என் சகோதரன்.
25 வருடங்கள் நோம்பு போல் , வாழ்க்கை, இருதய சிகிச்சைக்குப் பிறகு. தந்தைக்கு அடுத்தபடி இன்னும் அதிகமாக என்ன என்னிடம் பிரியம் கொண்டவன்.
முரளி, தலை முடி  வெட்டிக்கோடா.
முரளி சட்டை இல்லாமல் இருக்காதே  டா. எனக்குப் பார்க்க முடியல.
சரி இதோ போறேன்  ரெவ் னு சொன்னதைச் செய்துவிடுவான்.
அவனுக்கு வாய்த்த மனைவியோ தங்கம்.
 கணவனுக்காக எத்தனையோ விரதம் .கோவில்கள்.
மகன் தந்தை சொல் மீறாத பிள்ளை. அப்பா இந்தக் கோவில்னு சொல்ல வேண்டியதுதான். அடுத்தவாரம் பயணம் கிளம்பி விடுவார்கள். குருவாயூர், திருமலை, ஸ்ரீரங்கம், கும்பகோணம் என்று வண்டி பறக்கும்.
 60 வயது வரைத் தன அலுவலகத் தலைமைப் பொருப்பைப் பார்த்துக் கொண்டவன் , சேர்த்த பணம் போதும் என்று பக்தி மார்க்கத்தில் இறங்கிவிட்டான் .
பேத்தியின் காவலன்.மாணவன் என்று பல அவதாரம்.
ஒரு நொடி உட்காராமல் ஏதாவது செய்து கொண்டிருப்பான்.
இதோ இரண்டு நாட்களுக்கு முன் அதிகாலை ஒரு வினாடியில் இறைவன் அழைத்துக் கொண்டான்.
நான் இங்கிருக்கிறேன்.
என் உயிராக நேசிப்பவர்களைக் கண்ணாடிப் பெட்டியில் பார்த்து அலுத்துவிட்டது.
நான் இந்தியா  செல்லவில்லை. அதற்குத்தக்க சரியான
விமான டிக்கட்டும்  கிடைக்கவில்லை.
அடுத்த நாள் போவதற்குள் காரியங்கள் முடிந்திருக்கும்.
மௌனம்  காத்துக்   கண்ணீர்வடிக்க மட்டுமே தெம்பு.

இனி வரும் சிரம நாட்களை எதிர்கொள்ள இறைவன் துணை இருப்பான்,. இதுவும் அவன் சொல்லிக் கொடுத்து
தான்.  நன்றி முரளி.

Sunday, May 14, 2017

அன்னையர் தின வாழ்த்துகள் மே 14 2017

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
என் அம்மாவுக்கு என் தலை முடியை சீவி
சிடுக்கெடுத்து, நீண்ட பின்னலை
சிலும்பில்லாமல் பின்னி, துளியே துளி
நுனி முடி விட்டு ரிப்பனும் கட்டிவிடுவதில்
அத்தனை இஷ்டம்.

என்னைவிட அடங்காப் பிடாரியாக என் முடி சிடுக்குகள்.
எண்ணெய் தேய்த்து, கண் எரியாமல் உசிலம்பொடி
போட்டு அலசித் தேய்த்து ,உலர்த்தி,
சொகுசாக சாம்பிராணிக் கூடையில் உலர்த்தி
 இரட்டைப் பின்னல் வெள்ளியன்று உண்டு.
தலையில்  ஏதோ திண்டுக்கல் உஷ்ணத்தில்  வந்த கட்டிக்காக எத்தனை கைவைத்தியம்
பார்க்கமுடியுமோ அத்தனையும் செய்தாள்.
சிறிவெங்காயம் அரைத்து வதக்கிப் பற்றுப் போடுவாள். அவள் போற்றீப்
பாதுகாத்த முடியைக் காப்பாற்றமுடியாமல் இருபது வருடங்கள் தவித்தேன்.
என் மாமியார் இறைவனிடம் சென்றவுடன் மெல்ல ஆரம்பித்தது
முடிவெட்டும் புராணம்.
என் மகளின் தோழிகள் அதிர்ந்தார்கள்.வேண்டாம் ஆன்ட்டி
என்று சொல்லிப் பார்த்தார்கள் .அவர்கள் அனைவருக்கும் நீளமுடிதான்
என் பெண்ணையும் சேர்த்து.
 கொத்தமல்லிக்கட்டாக முடிந்த முடியை
இதோ இரண்டு வருடங்களாக அம்மாவுக்காக வளர்க்கிறேன்.
இந்த வயதில் தேவையா என்று தோன்றினாலும்,
பாவம் எங்க அம்மா எங்கிருந்தாவது
பார்த்துக் கொண்டிருப்பார்,மகிழ்வார் என்றே நம்புகிறேன்.
என் பேத்திகளுக்கும்  நீளமுடிதான். ஒரு அங்குலம்.
கூட  நறுக்க விடமாட்டார்கள்.

Wednesday, May 10, 2017

அழகர் ஆற்றில் இறங்க ........

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்..
அழகர் மலை மன்னர் வந்தார்
ஆற்றில் இறங்க அண்ணல் வந்தார்.
 கள்ளர் மலை கள்ளர் வந்தார்//  கோதை மனம் மகிழ்  மன்னர் வந்தார்.
பச்சை ப்   பட்டுடுத்தி  சுந்தரன் வந்தார்
பசும்பொன்னால் ஆன பெருமாள் வந்தார்.
மதுரை மனம் மகிழ அரசர் வந்தார்
ஆண்டாள் கைமாலை அணிந்த காளை  வந்தார்.
தங்கப் பரியேறி விமலன் வந்தார்
அழகுத்  தோளுடை   அழகர் வந்தார் .
வையம் செழிக்க,
பொன் பயிர் விளைய
அழகா நீ அருள் புரி .

Friday, May 05, 2017

முதுமை ஒரு வரம்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்..      சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை.
உண்மை தான். அன்பு வார்த்தைகள் அதிகம் பேசாமல்
முதுமை கழிவது மிகச் சிரமம்.
அதைவிடச் சிரமம்
செய்யாத செயலுக்குப் பழி ஏற்பது.  லக்ஷ்மிப்
 பாட்டி ஒரு தடவை இது போல மாட்டிக் கொண்டார்.
மருமகள்  கணவனிடம் சொல்ல,
  மகன் பாட்டியிடம்  சுடு சொல் சொல்ல
பாட்டி விழித்தார்.
நான் ஒண்ணும் சொல்லலியேப்பா.
 பக்கத்துவீட்டுச் செல்லியிடம் சாதாரணமாகத்தான் சொன்னேன்.
அவளுக்கு ஏதோ மனக்குறை. சரியா சாப்பிட முடியலை. ஒவ்வொரு தடவையும்
அவள் ...மருமகள்
கணக்கு எழுதும்போது நான் ஏதோ தப்பு செய்யற மாதிரி இருக்கு.  இப்படின்னு.,,,,,
 புத்திசாலிதான் அவள். 65 வயதில் இத்தனை கிழடு தட்டிப் போச்சென்னு
வருத்தமாக இருந்தது.

ஆதரவா நாலு வார்த்தை சொன்னேன். அவளுக்கு நாலும் பிள்ளைகள்.
 இரண்டு நாட்கள் அங்கே போய் இருந்துவான்னு.
மத்தபடி இந்த அகத்தைப் பற்றிப் பேசலியே என்று.
   இனிமே அங்கே போகாதே. நீ அவளைவிடப் பெரியவள்.
எத்தனையோ சௌகர்யமாக இருக்கிறாய்,
வாயால் கெடுத்துக் கொள்ளாதே என்று பொரிந்துவிட்டுப் போய்விட்டான்.
  ஆஹா,நமக்கென்று ஒரு நல்ல தோழி இருந்தாள்.
இனி எப்படி என்றவளுக்கு, வரப்பிரசாதம் பேத்தி வழியாகக்
கிடைத்தது. புத்தக சந்தையில் வாங்கியதாக, லக்ஷ்மி கடாக்ஷம்,
 அமரதாரா, கள்ளிக்காட்டு இதிகாசம் எல்லாம்
கொடுத்துவிட்டுப் போனாள்.
  கையில் வைத்துப் படித்தால் கை வலிக்கும் என்று கூடவே
ஒரு அலுமினிய மேஜையும் வாங்கி வந்திருந்தாள்.
  நெல்லுக்கு இறைத்த நீர் பாடல் தான்
நினைவுக்கு வந்தது லக்ஷ்மி பாட்டிக்கு.
  தாளுண்ட நீரைத் தலையால் தரும் தென்னை
போன்ற பேத்தியை ஆதரவுடன் அணைத்துக் கொண்டாள்.

Tuesday, May 02, 2017

Shilthorn Switzerland

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
17ஆம்தேதி காலை மழையோடு ஆரம்பித்தது. எங்களுக்குள் விவாதம். நாம் போகப் போகும் இடம் ஒரு மலைச்சிகரம். அங்கே மதிய உணவுக்குப் போய்விடலாம்.
மழையிருந்தால் ஒன்றுமே பார்க்க முடியாது. அந்த மழையை இங்கயே பார்த்துக் கொண்டு சீட்டுக்கட்டு ராஜா பாடலாமேன்னு ஒரு யோஜனை,.
பையனோ இவ்வளவு தூரம் வந்து உள்ளே உட்காருவானேன்.
குடையிருக்க கோட் இருக்க மழைக்குப் பயமேன்னு டயலாக் சொன்னதும் பத்து நிமிடத்தில் ரயில் நிலையத்தில் இருந்தோம்.
கையில் சாப்பாடு எடுத்துக் கொள்ளவில்லை . பேத்தியின் இரண்டாவது  பிறந்த நாள்  அன்று:)
அதனால் அவ பேரைச் சொல்லி எல்லோருக்கும் மலையுச்சி ரெஸ்டாரண்டில் மகன் எங்களுக்குச் சாப்பாடு கொடுக்கப் போகிறான் 
ரயில் நிலையத்தில் வண்டி வர இன்னும் இருபது நிமிடம் இருக்கும் என்ற நிலையில்
மழையைப் பார்த்து,சத்தமில்லாமல் அது விழுவதை ரசித்துக் கொண்டிருக்கும்போது,
ஒரு டாக்ஸிக்காரம்மா வந்தாங்க.
அவங்க எங்களைப் பாதிதூரம் கொண்டு விடுவதாகவும் 100ரூபாய் கொடுத்தால் போதும்னு சொல்லவும், சரி அந்தப் பயணத்தையும் சவாரியையும் ரசிக்கலாமேனுட்டு அந்தப் பெரிய வண்டியில் அனைவரும் ஏறிக் கொள்ள மழையில் வெகு லாவகமாக வண்டி ஓட்டினார் எலிசபெத் .
அவரும் கணவருமாக க்ரின்டெல்வால்டில் இருபது வருஷமாக வாடகை வண்டிகள் ஓட்டுகிறார்களாம். நல்ல வருமானம். இந்தியர்களும் ,ஜப்பானியர்களும் தான் அதிகம் வருகிறார்கள் என்றார்.
இன்னும் பத்து வருடம் ஓட்டலாம் என்றதும்,நான் அவசர அவசரமாக ஏன் வயது வரம்பு உண்டா என்றேன். ஓ,நோ எனக்கு அப்ப 70 வயசாகிவிடும்
என்றாரே பார்க்கலாம்.!!!!!
அப்ப இவருக்கு இப்ப அறுபது. அழகா சம்பாதிக்கிறாரேன்னு எனக்கு ஆற்றாமையும், தன்னிரக்கமும் மிகுதியாச்சு.
சே, நாம எல்லாம் என்ன கணக்கில சேர்த்தி. இதைப் பாரு என்ன ஜம்முனு வண்டி ஓட்டறது. மழை,மின்னல் அப்படீனு ஒரு பயம் உண்டா. எங்க சிங்கம் வண்டீ ஓட்டறதில சமர்த்தர்னா இவ மகா சமர்த்தியா ஓட்டறா.
சாப்பாடுனு ஒரு ரொட்டியும் ஒரு சாஜேஜும் கடித்துக் கொண்டாள்.
சிக்குனு இருக்கா. பளபளனு முகம் ஒரு சுருக்கம் கிடையாது.
சுதந்திரம் அப்படி இப்படீனு மனசு பொருமிப் பொருமி,
என் நெத்தி சுருங்கியே போச்சு.
சிங்கம்தான் அவளுடைய  பக்கத்து ஃ ப்ரண்ட் சீட்டில் உட்கார்ந்து அவள் ஓட்டும் அழகை கமெண்ட் செய்து கொண்டிருந்தார். 'வேகம் குறையாம
 ஒரு ஜெர்க் கூட இல்லாம எப்படி ஓட்டறா பார்த்தியா'ன்னு என்னைத் திரும்பி பார்த்துக் கேட்டார்.
ஆங், வண்டி நல்ல வண்டி, ரோடு பள்ளம் மேடு கிடையாது, அப்புறம் என்ன?
நானும்தான் ஓட்டுவேன் என்றேன்.
'பையா அம்மா வண்டி ஓட்டக் கத்துக் கொண்டது ஞாபகம் இருக்கா ராஜான்னு' சிரிச்சார்.
ஆஹா மறக்குமா,என் பிஞ்சு வயசு நிகழ்ச்சிகள் ஆபத்துகள்ள அதுவும் ஒண்ணாச்சே.னு எங்கியோ பார்த்தான்எங்க சின்ன மகன்.
போச்சு இன்னிக்கு சம்பந்திகளுக்கு இன்னோரு விருந்துனு நான் அவனைத் தடுக்கப் பார்த்தேன்:)
பார்க்காதடா,கொசுவத்தி கொளுத்தறது என்னோட உரிமை.அதை நீங்க எல்லாம் பறிச்சுக்கக் கூடாதுன்னாலும் கேக்கலை.
இன்னும் ஒரு சீட்டுப் பின்னாலிருந்த பெண்டாட்டியப் பார்த்து அம்மாவுக்குக் கார் ஒட்டத் தெரியும்பா என்றான்.
நிஜமாவா சொல்லவெ இல்லையே என்றும் அவளும் ஒத்துப் பாடினாள். ''ஆனால் பாதசாரிகளின் நலத்தை உத்தேசித்து திருச்சி போக்குவரத்து இலாகா,
லைசென்ஸ் கொடுக்க மாட்டேனுட்டாங்க''ன்னான்.
ஏம்மா நல்லா எட்டுப் போடலியான்னு மருமகள் கேட்டாள்.
எட்டா!!உங்க அம்மா பதினாறே போட்டு இருப்பா. என்னா ஆச்சுன்னா
நானும் குழந்தைகளும் வண்டியில் இருந்ததால மரத்தோரமா நிறுத்திட்டா:)
க்ளட்ச்சையும் பிரேக்,ஆக்ஸிலேட்டர் எல்லாத்தையும் மாத்தி மாத்தி அழுத்தினா வண்டி ஓடும்னு நினைச்சு,ஆக்சிலேட்டர்,ப்ரேக் ரெண்டையும் இரண்டு பாதத்தில பிடிச்சுண்டு விடவே இல்லை. அப்படியே வண்டி எங்க போறோம்னு தெரியாம திணறிப் போச்சு.
எதிர்த்தாப்பில போலீஸ்காரர் அவர்மாட்டுத் தன் வேலையைப் பார்க்க சைக்கிளில் போய்க் கொண்டிருந்தார் எங்க வண்டி துள்ளறதைப் பார்த்துட்டு
ஆஹ்ஹ்னு சைடு வாங்கி பள்ளத்தில இறங்கிட்டார்.
அவரைப் பார்த்ததும் அம்மாவுக்கு உதறல் எல்லாத்தையும் விட்டுட்டா. வண்டி
ரோடைவிட்டுக் கீழ வயலில் இறங்கி தத்தி தத்தி ஒரு புளியமரத்திலடில போய் நின்னுது. ஹாய்னு சத்தம் போட்டுட்டுனு நீங்க எல்லாரும் இறங்கியாச்சு.
அவர் நிறுத்தினதும் நான் வண்டியை நிறுத்தின வைபவத்தை எல்லோரும் ரசிச்சுக் கொண்டாடினாங்க.
கூடவே இவர் என்னை அநேகமா போலீஸ் பார்த்து
உன்னை லாக் கப்பில வைப்பாங்க. அதுவும் அப்ப 1974ல ஏதோ ஒரு நெருக்கடி அரசியல்னு நினைக்கிறேன்.
உன்னை அவன் லேசில விடப்போறதில்லன்னு ,வேணும்னா நாங்க செல்வம் லாட்ஜில சாப்பிட்டுட்டு உனக்கும் ஏதாவது கொண்டு வரோம்னு சொன்னது
எல்லாம் நினைவுக்கு வர எனக்கே என் அசட்டுத்தனம் சிரிப்பாக இருந்தது.
எப்படியோ அந்த அழகான ஃபியட் கார் சேதாரம் ஏதும் இல்லாம வெளில வர அந்தக் கான்ஸ்டபிளே உதவி செய்தார்.
அம்மா, அய்யாதான் ஜம்முனு ஓட்டறாரே, நீங்க சொகுசாப் போங்கம்மா. எதுக்கு இந்தக் கஷ்டமெல்லாம்னு ஓதிட்டுப் போனார்.
இப்பவும் திருச்சி ஏர்போர்ட் ரோடைப் பார்த்தால் அந்தப் புளியமரத்தையும் பார்த்துப்பேன்:)
நமக்கு ஞானம் வந்த இடமில்லையா!!
இப்படியாகத்தானெ திருமதி எலிசபெத் க்ராஃப் உபயத்தில் சம்பந்திகளுக்கு ஒரு கதை கிடைத்தது. நமக்கும் ஒரு பதிவு கிடைத்தது:)

Sunday, April 30, 2017

சர்க்கரை இனிக்கிற சர்க்கரை

Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

இதெல்லாம் மற்றவர்களுக்குத்தான் எனக்கில்லை சொக்கா.
இப்ப எல்லாம்  வருத்தம் விலகிவிட்டது.. சர்க்கரை பதப்  படுத்திவிட்டது.
2004 ஆம் வருடம் ஒரு எதிர்பாராத நாள் தம்பி  மறைந்தான்.
சின்னவன். காலை  சுற்றி வந்தவன்.
 பத்து நாட்களில் மகன் களுக்குத் திருமணம்.
முதல் நாள் அத்தனை மாடிகள் ஏறி இறங்கி
எல்லோரையும்  அழைப்பிதழ் கொடுத்து  மனைவியும் கூட அழைத்துப்போய், மயில்கண் வெட்டி புரள புரள அவன் வந்த காட்சி,என்னை திகைக்க வைத்தது.
   டே ,,, யாருக்கு கல்யாணம்   . உனக்குன்னு யாராவது தப்பா
நினைத்துக் கொள்ளப்  போகிறார்கள், என்று கேலி செய்தது நினைவுக்கு வருகிறது .

பிறகு வந்ததெல்லாம் கனவு.  திருமண முதல்நாள் தலை சுற்றி விழுந்தது
காலை உடைத்துக் கொண்டது எல்லாம் முன்னுரை.
முழுப் பரிசோதனை தொடர்ந்தது.
கண்டு பிடித்தார்கள்  என் உடலில் ஓடும் இரத்தத்தில்  சர்க்கரை அளவு 400
எட்டி இருந்தது. அதுவும்   ஃ பாஸ்டிங் 😈
ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் எல்லாம் பக்கவாத்தியம் .
டி  ஜெ. செரியன்  முதல் டாக்டர்.  என்  குடும்பத்துக்கு  காட் ஃ பாதர்.
அவர் போட்ட மிரட்டலில்  45 நிமிடம் தினம் நடக்க ஒத்துக் கொண்டேன்.
சிங்கத்தையும் மிரட்டினார். அவ  விழாம கூட நட .
நான் சிரித்துக் கொண்டேன்.
மெல்லநட சரோஜாதேவி நான்.  நாலு கால்  ஓட்டம் அவருடையது.
வண்டியில் மெரினா போவோம்.
கடலைப் பார்த்தே நிற்பேன்.
சைலன்ட் உரையாடல் அதனுடன். அதற்குள் அவர் நேப்பியர் பாலம் வரை போயிருப்பார். நானும் ஆடித்தேர் மாதிரி  வேக நடைக்காரர்களுக்கு வழிவிட்டு  கிரேசி மாது, பாலாஜி, மொட்டை பாஸ்கி, நம்பியார், சிவக்குமார் அவர் மனைவி   எல்லோருக்கும்  வணக்கம் போட்டுவிட்டு நடப்பேன். தி எம்  எஸ் கூட நடக்க வந்திருக்கிறார்.
விஸ்வநாதன் சார்.  ஒரு மகிழ்ச்சியான வேலைகள் அவை.
நான் பாதி தூரம்  கடக்கும் போது  சிங்கம் திரும்பி வந்து கொண்டிருக்கும்.
  எனக்குப் பசி எடுக்கும். முகத்தைப் பார்த்து சரவணபவன்
போலாமா  என்பார். ஆமாம் கால் வலிக்கிறது. திரும்பிடலாம் 😊
என்று சிரிக்காமல் சொல்வேன்.

இப்படி ஒழுங்காக நடந்ததால்  இரண்டு வருடங்கள் கழித்து ஒரு மாதிரி  ஒரு லெவலுக்கு வந்தது.      
 இந்த புராணம் இப்ப எதுக்குன்னு சொல்கிறேன்.
ஊரை வீட்டுக் கிளம்பும்போது ஒரு பத்துமாதத்துக்கான மருந்துகளை எடுத்துக் கொள்வது வழக்கம்.
அப்படியும் ஒரு தேசம் போய் அடுத்த தேசம் போவதற்குள், நடுவில்
அங்கங்கே மேற்கொள்ளும் பயணங்கள்
எல்லாம்  சர்க்கரையை மேலே கீழே தள்ள ஆரம்பித்தன.
நயாகரா போகும்போது மருந்தெடுக்க மறந்தேன். அங்கே இருந்த வைத்தியரிடம் சொல்லி அவர் மிக நல்லவராக  இருந்த காரணத்தால் எப்படியோ சமாளித்தேன்.
கூட வருபவர்கள் பாடு யோசித்துப் பாருங்கள். பாவம் இல்லையா
இதோ ஹிஸ்டரி  ரிப்பீட்டிங் .இங்கே  செப்டம்பர்  மாதம் வரும்போது ஆறு மாதத்துக்கான  மருந்துகளே எழுதி எடுத்துக் கொடுத்தார்.
இதோ ஏழு  மாதங்கள் கடந்து விட்டன.
மருந்து தீரும் நேரம். மகன்  வேலை பொறுப்புகள் நிறைய. அவன் என்னைக் கூட்டிப் போய்  மீண்டும் திரும்ப வேண்டும் மருந்துகளை வாங்கிக்  கொண்டு.
 கடவுளே தவிப்பு அதிகமானது/ அப்போதுதான் எழுத்தாள திருமதி வித்யா சுப்பிரமணியம் இந்தோனேசியா வர போவதைச் சொன்னார்.
எனக்கு அப்போ கூட உரைக்கவில்லை.
பெண் தான் உற்சாகம் கொடுத்தால். நீ அவர்கள் உதவியைக் கேளும்மா. மறுக்க மாட்டார் என்று.
மிகத்தயக்கமாக இருந்தது.
தைரியம்  வரவழைத்துக் கொண்டு உள்பெட்டியில் கேட்டேன்.
உடனே சரி என்றுவிட்டார். மருந்துகளைக் கடையில் சொல்லி வல்லபா ஸ்ரீனிவாசனி டம் கொடுத்து அது வித்யா அம்மாவையும் அடைந்து இதோ அவர் மகள்  வீட்டில் இருக்கிறது.  முக நூல்  அறிமுகம் மட்டுமே. நேரில்  இன்னும் பார்க்கவில்லை. வல்லபா எங்க ஊர்ப் பெண். வீட்டுக்கும் வந்திருக்கிறார். அவர் செய்த உதவி சொல்லில் அடங்காது.

எல்லோருக்கும்  மேலே  இருக்கும்  கடவுளின்  கருணை.
குருவாயூரப்பன் பக்தை வழியாக  வந்த வைத்தியம்.
அனைவரும் நலமே வாழப் பிரார்த்தனைகள்.
Saturday, April 29, 2017

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
  சமீபத்தில் கிடைத்த வாட்ஸாப் செய்தி. 
 நீ என்ன சொல்கிறாயோ, அதுவே உன்னைத் தேடி வந்து அடைகிறது.
 தினமும்  காலையில் எழுந்து கண்ணாடி முன் நிற்கும்போது
நான் நன்றாக இருக்கிறேன். எனக்குக் குறை ஏதும் கிடையாது.
ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றும்,
எல்லோரையும் நேசிக்கிறேன்,, எல்லோரும் என்னை நேசிக்கிறார்கள்
உலகம்   முழுவதும் நன்மைகள் நடக்கின்றன.
என்று இது போல பாசிடிவ் நினைவலைகளை நம்மைச் சுற்றிப் பரப்ப வேண்டும்.
இதுதான் அந்த செய்தி. ஏற்கனவே ரெய்க்கி கற்ற போது இந்த ஐ ஆம்.
கொள்கை கற்றது மறந்துவிட்ட நிலையில்
இது உற்சாகம் கொடுப்பதாய் இருந்தது.

எதிர்மறை எண்ணங்களைத்தவிர்த்தாலே  பாதி வாழ்க்கை நிமிர்ந்துவிடும்.
ஆனால் முதலில் மந்தில் உதிப்பதென்னவோ, இப்படி ஆகிறதே
  விடிவே கிடையாதா. இன்னும் எத்தனை நாள் இப்படி
என்கிற எண்ணங்களே. 
நினைப்புதான் பொழைப்பைக் கெடுக்குதுன்னு யாரோ 
எப்பவோ சொன்னது நினைவுக்கு வருகிறது.
எத்தனை உண்மை அதில்.

நடப்பவை இருக்கட்டும் நல்லவற்றை நினைப்பதில் தவறு இல்லையே.
நடந்த நல்லது அல்லாதவைகளை நினைத்து வருந்தி
அதிலேயே உழல்வதில் என்ன லாபம் இருக்க முடியும்.

எல்லாம் இருக்கட்டும் நீ எப்படி என்கிறீர்களா.
இதோ முயன்று கொண்டிருக்கிறேன்.
 பிறருக்குப் புத்திமதி சொல்வது வெகு சுலபம்
இல்லையா.

Tuesday, April 25, 2017

எங்கள் ப்ளாகிற்கு எழுதிய கதை ஒரு நாள் மயக்கம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மழையும் மந்தாரமாக இருக்கும் வானத்தை ஜன்னல் திரை வழியாகப் பார்த்த சுதாவுக்கு, உற்சாகம்  மனம் சுறுசுறுப்பானது.
குழந்தைகளின் படுக்கை அறையில் எட்டிப்ப் பார்க்கும்போது
இரண்டு பெண்களும் அழகு தேவதைகளைப் போல் ஒரே ரஜாய் அடியில் நல்ல உறக்கம் போட்டுக் கொண்டிருப்பது பார்த்து சந்தோஷப் புன்னகை வந்தது.


அடுத்து கணவனின் படிப்பறைக்கு வந்ததும் ,அவன் கைகளிலிருந்த கண்ணாடி
கிண்ணத்தைப் பார்த்ததும் அவள் மனம் சட்டென்று நின்றது.


அழகான புன்னகையோடு பாசு அவள் கை பிடித்து இழுத்தான். என்ன மழையைப் பார்த்ததும் அம்மாவுக்கு என்ன யோசனை வருது, என்ற கேலிக்குரலோடு அவளை வளைக்க முனைந்தான்.

''கட்டாயம் இந்த யோசனை இல்ல:)


...............................

வெளில போய் இந்த கோவை காற்றை ,சிலுசிலுப்பை அனுபவிக்க ரொம்ப ஆசையா இருக்கு. வாங்களேன்.  ராஜம்மாவிடம் குழந்தைகளை விட்டுவிட்டு ஒரு குட்டி ட்ரைவ் போய் விட்டு வரலாம்.  இல்லாவிட்டால் அதுகளயும் அழைத்துக் கொண்டு மேட்டுப்பாளையம் ரோடில் ஒரு நீள மழை ஊர்வலம் போலாமே என்றாள்.

'கொஞ்சம் வயசு ஆன பிறகு உன்னைக் கல்யாணம் செய்திருக்கணும்.'
யாருக்கு?
'ஏன் உனக்குத்தான் 'என்றவனைப் பார்த்து சிரித்தபடி ,அவன் கையிலிருந்த பானத்தைத் தனிப்படுத்தினாள்.
'சரி இது உள்ள போனால் வண்டி ஓட்ட வேணாம். நானும் குழந்தைகளோடு குட்டித் தூக்கம் போட நீங்களும் கொஞ்சம் தூங்குங்கள்' என்றபடி செல்பவளை யோசனையோடு பார்த்தான் பாசு.
ஏன் இவள் இப்படி இருக்கிறாள்? எல்லாத் திருமணங்களும் குழந்தைகள் பிறந்ததும் தேக்கமடைகின்றதா, இல்லை எனக்கு மட்டுமா இப்படி என்று ஏமாற்றத்தை மறக்க மீண்டும் பாட்டிலைத் தேடினான்.

சற்றே கிறங்கிய நிலையில் தோழனின் வருகையை அறிவித்தது அவனது பெரிய வண்டியின் ஹார்ன் சத்தம்.
ஹேய் பாஸ் ,வாடா வெளில போலாம் 'கெட் யுர் ஃபாமிலி' என்ற சத்ததோடு உள்ளே நுழைந்தான் சுரேஷ்.
சுரேஷ் பாசுவின் அலுவலகத்துக்கு மென்பொருள் சப்ளையர்.  இரண்டு மூன்று வருடப் பழக்கம்.  அவனால் தான் பாசு குடிக்கக் கற்றுக் கொண்டான் என்று சுதாவுக்கு அந்தக் குடும்பத்தை அவ்வளவாகப் பிடிக்காது.
அதுவும் அவர்கள் கல்கத்தாவிலிருந்து நவநாகரீகமாக வந்து இந்தியும் ஆங்கிலமும் கலந்து பேசுவது ,அதற்கு பாசுவும் தாளம் போடுவது, எல்லாரும் சேர்ந்து இரவுக் காட்சிகளுக்குப் போய் குழந்தைகளின் தூக்கம் கெடுவது இப்படி நீண்டு கொண்டே போகும் அவள் லிஸ்ட்.
சுரேஷின் மனைவி வட இந்தியப் பெண்.அழகி. விதம் விதமாக சமைக்கத் தெரிந்தவள்.  அடிக்கடி இவர்களை அவர்கள் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுப்பார்கள்.
தான் வரவில்லையென்றால் தனக்கு தாழ்வு மனப்பான்மை என்று நினைத்து விடுவார்களே!! சுதாவும் குழந்தைகளை அழைத்துச் செல்வாள்.

அவர்கள் மூவரும் பானங்களோடு இருந்து உரையாட,  பழைய இந்திப் பாடல்களைப் பாடி முடிக்கும்போது,குழந்தைகளைக் கவனித்து அவர்களை உண்ண உறங்க வைப்பாள்.
11 மணி அளவில் 'ஓ ஐ அம் ஃபைன் என்றபடி பாசு கிளம்ப அரவமற்ற வீதிகளில் புகுந்து வீடு வந்து சேருவார்கள்.
 
இதே போல ஒரு சனிக்கிழமை இரவு.  அடுத்த நாள் சுதா பாசு இருவருக்கும் திருமண நாள்.
கோவை ராம் நகர் ஸ்ரீராமனைத் தரிசிக்க இருவரும் யோசித்துவைத்து, முதலில் சுதாவுக்கும் தனக்குமாக உடைகள் எடுத்து வந்தான் பாசு. அவனுடைய அலுவலகமும் அங்கேயே இருந்ததால் சுலபமாக முடிந்தது வேலை. தனக்குப் பிடித்த மாதிரி,ஆரஞ்ச் வண்ண டெர்கோசா பெரிய பூக்களோடு இருந்த புடவையும், ஸ்கைப்ளூ வண்ண லிபர்டி டெரிகாட்  சட்டையும் வாங்கி வண்டியில் வீட்டுக்கு விரைந்தான்.

தெருமுனை திரும்பும் போதே சுரேஷின் வண்டியைப் பார்த்ததும் மனம் திக் என்றது.
நண்பனைக் காண்பதில் சந்தோஷம் என்றாலும் ,சுதாவின் அதிருப்தியை 
இன்று சம்பாதிக்க வேண்டாமே எனும் யோசனை முன் நின்றது.
வண்டியை நிறுத்தியதும் சுரேஷின் சிறுவர்களும், தன் மழலைகளும் ஆடும் ஆட்டத்தைக் கண்டு மனமகிழ்ச்சியோடு உள்ளே நுழைந்தான்.

முகம்,மனம் நிறைந்த காதலோடு கணவனையும் அவன் கைகளில் இருந்த பைகளையும் எதிர்கொண்டாள் சுதா. அடிக்குரலில் அவர்களைச் சீக்கிரம் அனுப்பிவையுங்கள் என்ற வேண்டுகோளோடு.
ஹ்ம்ம். நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே.
சுருக்கமாகச் சொல்லப் போனால் விபரீதமாக முடிந்தது.
இரண்டு மூன்று மடக்கு விஸ்கி உள்ளே போனதும் , எல்லோருக்கும் குஷி பிறந்து
பாடல்கள் ஆரம்பிக்க ,சுதா மணியைப் பார்த்தாள் 9 ஆகி இருந்தது.
கண்வனின் அருகில் நின்று தோசை தட்டில் தோசையைப் போட்ட வண்ணம், சீக்கிரம் ஆகட்டும் என்று கிசுகிசுத்தாள்.
சுரேஷின் மனைவி பலமாகச் சிரித்தபடி  நோ சீக்ரெட்ஸ் நவ் என்று பாசுவின் அந்தப்பக்கம் நின்று அவன் தோள் மேல் கைவைத்தாள்.
அவன் அதை உணர்ந்தானோ இல்லையோ, அவன் கை தன்னிச்சையாக அவளை வளைத்தது.  சுதாவின் வயிற்றில் இடி இறங்கியது போல ஒரு உணர்வு.

சரேலென்று கொந்தளிப்போடு கையிலிருந்த பீங்கான் தட்டை விட்டெறிந்தாள்..சுக்கு நூறாக உடைந்த தட்டை வெறித்தவள்,
தன் பெண்களை அழைத்துக் கொண்டு படுக்கை அறைக்குள் சென்று கதவை சத்தமில்லாமல் சாத்தினாள்.
கொஞ்ச நேரத்தில் சுரேஷ் வண்டி புறப்படும் சத்தமும், பாசு தன் அறைக்குள் செல்லும் சத்தமும் கேட்க. குழந்தைகள் உறங்கும் வரை தட்டிக் கொடுத்தவள் ,அழுத கண்களோடு உறங்கச் சென்றாள்.
காலை எழுந்தவள் கலக்கத்தைக் களைந்துவிட்டுக் கடவுளிடம் விளக்கேற்றி நிம்மதி வேண்டினாள்.
யந்திரத்தனமாக டோஸ்ட் செய்து, தோசை எல்லாம் வார்த்து, ஆரஞ் கிசான் கலந்து மூவருக்கும் சாப்பாட்டு மேஜையில் வைத்துவிட்டு, தன் துளசி, மல்லி என்று செடிகளொடு நேரம் கழித்தாள்.
பின்னால் பாசு வரும் சத்தம் கேட்டதும் தோசை வைத்திருக்கிறேன்.  குழந்தைகளோடு சாப்பிடுங்கள். நான் கோவில் போகவேண்டும் என்று திரும்பினாள்.

அழகான பாசுவின் முகம் சிவந்த கண்களோடு தன்னைப் பார்ப்பதும் தெரிய கண்ணில் தயாராக இருந்த துளிகள் கீழே சிந்தின.
 

சுதா மா. ஸாரி. ஐ டிட் நாட் know what came over me.  நாம் அனைவரும் கோவிலுக்குப் போகலாம். பத்துவருடம் முன் நாம் சேர்ந்த சிறந்த தினம் இல்லையா.
ஆமாம் ஆனால் அந்தப் புனிதம் இருக்கிறதா தெரியவில்லை.
நான் திருச்சி போய் வருகிறேன். எனக்கு அகிலாண்டேஸ்வரியிடம் முறையிட ஆசை என்று கலங்கிய மனைவியின் கரங்களைப் பிடித்தான் பாசு.

நீ போனால் நானும் வருவேன்.  எனக்கும் அவளிடம் கேட்கவேண்டும் என் மனைவி ஏன் என்னிடம் நெருங்க மறுக்கிறாள் என்று.
 மது அரக்கனை அழித்த மாதவன் கிடைத்தால் இந்த லக்ஷ்மியும் பாசுவிடம் வருவாள் என்கிற பதில் சட்டென்று வந்தது.
அன்று ராமர் கோவிலில் இருவரும் தரிசனம் செய்யும் போது மங்கையும் மணாளனும் சேர்ந்திருக்க மது வேண்டாம் என்கிற கையெழுத்திடாத ஒப்பந்தம் நிறைவேறியது.
மது இல்லாத புது இரவு வந்தது.

Monday, April 24, 2017

பாலியின் வீடுகளில் கோவில்கள். அவர்கள் கலாசாரம்

விருந்தாளிகளுக்குத் தனி இடம்.
வாஸ்து முறைப்படி அமைந்த கிராமம்.
  வீட்டுக்குள் நுழைவது நல்ல சக்தியாக இருக்க வேண்டும் என்ற முறைப்படி இலைகளில் கொஞ்சம் சாதம், எள்ளு, மலர்கள்,தானிய ம் ,ஊதுபத்தி மணம்  கமழப்  பச்சையும்,மஞ்சளுமாக  அழகுக் காட்சிகள்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
பழைய முறைப்படி கட்டப்பட்ட வீடு.
வீட்டுக்குள் சந்நிதி முன்னோர்களுக்கு.

வண்டியோட்டி சுதாமா  சொல்லி நான் புரிந்து கொண்ட
விவரங்கள்... சில கோவில்களுக்கு அருகேயே  இறந்தவர்களுக்கு எரியூட்டும் இடம் இருக்கிறது.

இந்து மதத்தையும் புத்தமதத்தையும்  கலந்து
வாஸ்து முறைப்படி வீடுகள் அமைகின்றன.
எரிமலை அவர்களுக்குத் தெயவங்கள் வசிக்கும் இடமாம். கடல்
நாகம் முதலிய  அசுரர் சக்திகள் வசிக்கும் இடம்.
இரண்டுக்கும் நடுவில் அமைந்த சமவெளியில் வீடுகளில் எடுத்த திசைகளின்   சக்திக்கு மதிப்புக் கொடுத்து
அறைகள் அமைக்கப் படுகின்றனவாம்.
தெற்கு   கழிவறைகள் இருக்குமிடம். வடகிழக்கு நல்ல சக்தி இருக்கும் இடமாம்.
வீட்டுக்கு   காம்பவுண்டு சுவர்கள் நல்ல உயரத்தில் எழுப்பப் பட்டிருக்கின்றன.
வாயில் குறுகலாக இருக்கிறது.  இரு புறமும்
சின்னைச்ச்சின்ன  கல்லாலான வடிவங்கள் திருஷ்டி பொம்மைகளாக மிரட்டுகின்றன.

எல்லோரும் வளம் பொருந்தியவர்களாக இல்லை. சிலர் வசதி படைத்தவர்கள். பார்க்கப் பளிச்சென்று  தங்க முலாம் பூசிய வண்ணக் கதவுகள்.
சில கதவுகள்  இல்லாத வாசல்கள். அவ்வாறு ஒரு வாசல் வழியே  ஒரு சந்நிதியில் அனுமன் மஞ்சள் வர்ணத்தில் பளிச்சிட்டார்.
உள்ளே போகத்  தயக்கமாக இருந்தது.
இங்கேயும் ஜாதி,வர்ணங்கள் வழக்கத்தில் இருக்கின்றன.
என்னுடன் படம் எடுத்துக் கொண்ட பெண் தன்னை  உயர் ஜாதி பெண் என்று அறிமுகப் படுத்திக் கொண்டார்.
 அவரவர் ஜாதிக்கு  ஏற்ற கோவில்களுக்குத் தான் செல்ல வேண்டுமாம் .
அட சாமி என்று  வருத்தமாக இருந்தது.
நல்லவேளை நம்மூரில்  அப்படி இல்லை. இவர்கள் 5000 வருடங்களுக்கு முன் இருந்த வழக்கத்தைப் பின் பற்றுகிறார்களோ. நீண்டு விட்டது பதிவு. இன்னும் விஷயங்கள்   நிறைய. பிறகு பார்க்கலாம்.😇😇😇

Friday, April 21, 2017

பாலி,மஹாபலி, வாலி, ராமாயணம்...பாலி 4

இராமாயண இறுதி கட்டம்.
கருடன் 
அசோகவனத்தை நினைவு படுத்தும் கேன்கனா  வனம் 
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
சரஸ் வதி 

  பாலி சென்ற பிறகு தெரிந்த  வரலாறு என்னைக் குழப்பியது . கடோத்கஜனுக்குப் பிரம்மாண்ட சிலை. மஹாபாரதத்தில் அனைவரையும் எதிர்ப்பது போல தத்ரூபமாகச் செதுக்கப்பட்டது ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்து நூசா தூவா போகும் வழியில் இருந்தது.
பிறகு ராவண வாலிக்கான யுத்தம் என்று சில சிலைகளை எங்கள் காரை ஓட்டிய சுதாமா சொன்னார்.

மஹாபலி  ராஜ்யமும் இங்கே  இருந்தது என்றும்,விஷ்ணுவும் மஹாபலியும்
போர் புரிந்தார்கள் என்றும் சொன்னார்.
ஒன்று புரிந்தது.
கோடரி வைத்திருந்தால் அசுரர்கள். வில்லேந்தினால் ராமன் ,இல்லையானால் பாண்டவர்கள்.

இங்கிருக்கும் கோவில்கள்  மஹாபலிபுரம்....மாமல்லபுரம் போலவே இருக்கின்றன.
கடலோரக் கோவில்கள் ஏழு.
இதைத் தவிர ஜாவாவில் ஒரு பிரம்மாண்டமான  கோவில் ஒன்றும் இருக்கிறது.
அங்கே போக முடியவில்லை
இங்கு வந்து குடியேறியவர்கள் பெயர் எல்லாம் மீரா,சித்ரா, காந்தா  என்று இந்தியப் பெயர்களாக இருக்கின்றன.
இங்கே  உள்ள கலாசாரம் ராமாயண காலத்தில் பரவியது போல ஒரு
தோற்றம்.

பாலி ராமாயணம் சீதையே அரக்கியருடன் போர் புரிவது போல 
அமைந்திருக்கிறது.  வீரப் பெண்மணியாகச் சித்தரிக்கப் படுகிறாள்.

Wednesday, April 19, 2017

சித்திரச்சோலை ....பாலி 3

Add caption
Add caption
இந்த ஓவியத்தைப் பற்றி கேட்ட பொது க்ரிஷ்னா என்றார்கள். திரௌபதி வஸ்திராபஹரணமோ  என்று யோசித்தேன். எல்லா மங்கையர் கையிலும் இந்த விசிறி இருக்கிறது. நாங்கள் பார்த்த  மாரீச,ராவண ,சீதை நாடகத்திலும் சீதை கையில் விசிறி. அந்த விசிறியால் சூர்ப்பனகையை விரட்டுகிறாள். பிறகு ராமனுடன் நடனம்.
இந்தக் கோலங்கள் மிக  கச்சிதம் .எல்லா இடங்களும் நம் ஊரை நினை செய்கின்றன. இந்த ஓவியங்களில் அநேகமாக ராமனும் ,சீதையும், ராவணனும், வானரங்களும்  காணப்படுகின்றனர் . 
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Tuesday, April 18, 2017

சிற்பம் சித்திரம் ....பாலி 2

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
சிற்பக  கலைஞர் கவனமாகச் செதுக்குகிறார்.
  இந்த பெயிண்டுகள், உளிகள் எல்லாம் எங்கள் வீட்டிலும் இருக்கின்றன.அவரிடம் நான் ஆங்கிலத்தில் சிங்கம் பற்றி சொல்ல அவரும் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் எனக்குத் தான் செய்யும் விதத்தை விளக்கினார். மிக அற்புத வடிவங்கள் அந்தக் கடை முழுவதும் இருந்தன. புகை பிடிக்கவேண்டாம் என்று அறிவுறுத்தினதற்குச் சிரித்துக் கொண்டார். அவருக்குப் பசி மறக்க புகை பிடிக்கவேண்டுமாம்.
செதுக்குவதற்குத்  தேவை உளியும் சிற்பியும் மரமும்.
 மிருதுவான நளினமான கைகள் .மனதில் உருவானது மரத்தில் வடிவெடுக்க
உரம் கொண்டு வலுவாயின.
அர்த்தநாரி 
 

Sunday, April 16, 2017

பாலித் தீவுகளுக்கு ஒரு சிறிய பயணம்.......UBUD.

கிட்டத்தட்ட 16  தீர்த்தங்கள் எண்ணினேன்.
எல்லா இடங்களிலும்  கட்டம் போட்ட துணிகளால் சுற்றப்பட்ட
புனித தளங்கள். வண்ண வண்ண குடைகள்.
சிவபிரானுக்கான கோவில்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 பேத்திக்கு ஈஸ்டர் விடுமுறை. இரண்டு வாரங்கள்.
அருகில்  இரண்டு மணி விமானப் பயணத்தில் போய் வரலாம் என்று தீர்மானம் .
எல்லாரும் ஒத்துக்க கொள்ள கிளம்பினோம்.
படங்கள்