Blog Archive

Monday, June 10, 2013

காதல் கடிதம் எப்படி எழுதலாம்..1

 


பதின்மவயதுகளில்  ஏற்படும் மாற்றம்......    உலகமே அழகாக இருப்பது போலவும்
நாமே இன்னும்    வனப்பு கூடியது போலவும்
தோழிகள் சொல்லும் பேச்சுகளெல்லாம் இன்பம் தருவதாகவும்

பெற்றோர் சொல்லும்  புத்திமதிகள் மட்டும் கொஞ்சம் கசப்பதாகவும் தோன்றும் காலம்.

எதற்காக அலங்காரம்? எனக்குப் பிடிக்கிறது. நான் நன்றாகத் தோற்றம் அளிக்கவேண்டும்.
சிறகில்லாத பட்டாம்பூச்சியாகப் பாதையில் பள்ளி நோக்கிப் பறக்கவேண்டும்.
கூடவரும் தோழிகளிடம்     சன்னமொழியில்   அன்றைய செய்திகளைப்
பரிமாறிக் கொண்டு  போகும் காலம்.

அந்தவருடம்   பத்தாம்வகுப்பில் திருமணமான பெண் பள்ளியில் சேர்ந்தாள்.
தினம் பள்ளிக்குப் புடவையில் தான் வருவாள். பள்ளி வந்ததும்
சீருடை அணிந்து கொள்ள   அனுமதிக்கப் படுவாள்.

பக்கத்துக் கிராமம்  பட்டிவீரன்பட்டியோ இல்லை   தாடிக்கொம்போ,(தனபாலனைக் கேட்டால் தெரியும்) அங்கிருந்து அவர்கள் வீட்டு வில்வண்டியில் அவளுடைய அம்மாவோடு வருவாள்.
அம்மா வண்டியில் சாப்பாடு கொண்டுவந்திருப்பார்.

மதிய சாப்பாடு வண்டிக்குள் தான்.

நாங்கள்   ஒரே அதிசயமாகப் பார்ப்போம்.  அவள் பெயர் அழகாக இருக்கும் கனகமணி.
படிப்பில் சுட்டி. எங்களுடன் அவள் நெருங்க கொஞ்ச நாட்கள் ஆகின.

மாப்பிள்ளை பெயர் என்ன என்று கேட்டால் சொல்ல மாட்டாள். அவரு மதுரையில் படிக்கிறார் என்ற விஷயம் மட்டும் பெருமை முகம் முழுவதும்

தெரிய  பூரிப்புடன் சொல்வாள்.
இவளுக்குப் பதினாறு(ஒருவருடம் பள்ளிக்குச் செல்லவில்லையாம்)
அவருக்கு இருபத்திரண்டாம்.

விடுமுறையின் போது   வந்து பார்த்துவிட்டு அன்று சாயந்திரமே கிளம்பிவிடுவாராம்.
அவர் படிப்பு  கெடக்கூடாது என்பதற்காக அவரது தந்தை செய்த ஏற்பாடு.

எங்களுக்கெல்லாம் கத படிப்பது போல ஒரு  உற்சாகம். அவர் எப்படி இருப்பார் .
கறுப்பா சிவப்பா. உயரமா குள்ளமா .நல்லா பேசுவாரா. சினிமா பார்ப்பாரா. ஜெயகாந்தன் கதை படிப்பாரா.
ஒரே குறுகுறுப்பு.  எங்களுக்கு:) அவரைப் பற்றிக் கேட்டாலெ அழகாகச் சிரிப்பாள். உங்களுக்கெல்லாம் எதுக்கு    இந்த சேதி.
எங்க புருஷனைப் பத்திப் பேசமாட்டோம்  என்று சொல்லிவிடுவாள்.

எங்களுக்கு அவளை சீண்டுவதில் மகா உற்சாகம்.
ஏம்ப்பா லெட்டர் போடுவாரா?
''ஆங்க் எப்பவாவது வரமுடியவில்லைன்னால்  ஒரு வரில இந்த டெஸ்டுக்குப் படிக்கணும். வாத்தி ரொம்ப மிரட்டறாரு வரமுடியாதுன்னு வரும் என்று சொல்லும்போதே சோகம் கவியும் அவள் முகத்தில்.

நீ அவருக்கு எழுதுவியான்னு கேட்டால் மிரளுவாள்.
ஆத்தி. அதெல்லாம் செய்யக் கூடாதுன்னு அத்தை(மாமியார்) சொல்லி இருக்காங்க..
  ஏய்கனகா! இந்த ஆத்தி எல்லாம் விட்டுடு.

அப்படி இல்லப்பானு சொல்லப் பழகிக்கோ என்று சொல்லிக் கொஞ்சம் கொஞ்சமாக   அவளை மாற்றினோம்.  இரட்டை ஜடை போட வைத்தோம்.
ஜார்ஜெட் தாவணியும்  வளையல்களும்  லேஸ் வைத்த   பாவாடைகளும் கட்டவைத்தோம்.
அவள்   அம்மா கொஞ்சம் கொஞ்சமாக எங்களுடன்  பழக ஆரம்பித்தார்.
ஏழுகஜப் புடவையும் கோடாலிமுடிச்சுக் கொண்டையும் நெற்றியில் நீண்ட கறுப்பு  பச்சையும் குத்தி  இருப்பார். காதில் தண்டட்டி போட்டிருப்பார்.

கண்ணுகளான்னு தன் எங்களை அழைப்பார்.
வண்டியை விட்டு வெளியே வரப் பழகிக் கொண்டார்.
எங்களில் முக்கால்வாசிப்பேர் சைவம் என்பதால்
அருமையாக இட்லி செய்து  ஏதோ சட்டினியும் வைப்பார்.
எங்கள் சாப்பாடெல்லாம் கலந்த சாதமும்   ஏதாவது  ஊறுகாயும் இருக்கும்.

அந்த இரண்டு இட்லிக்கே  நாங்கள் மிகவும் கடமைப் பட்டிருக்கிறோம்.
நாங்கள் ஏழு தோழிகள்.   தங்கலக்ஷ்மி, சூசைமேரி,மெஹருன்னிசா,சீதா,சாந்தி,உஷாகிருஷ்ணன்,நான்.!!!
பாவம் அந்த அம்மா. எவ்வளவு பாசம்.!



அடுத்த பதிவில் கடிதம்:0)



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பட்டிவீரன்பட்டி / தாடிக்கொம்பாக இருக்காது... ரொம்ப தூரம்...

மேட்டுப்பட்டி / பாறைப்பட்டி / வேடப்பட்டி / குள்ளனம்பட்டி ஆக இருக்கலாம்...

விரைவில் கடிதத்தை எதிர்ப்பார்க்கிறேன்...

வல்லிசிம்ஹன் said...

ஆஹா. உயிர்காப்பான் புதல்வன்.
நன்றி தனபாலன்.மேட்டுப்பட்டி,பாறைப் பட்டி நினைவுக்கு வருகிறது.
மிக சாதுவானபெண். சாமர்த்தியமானவளும் கூட. இப்ப எப்படி இருக்கிறாளோ.
இதோ வந்து கொண்டே இருக்கிறது காதல் கடிதம்:)நன்றிமா

Geetha Sambasivam said...

ஆஹா, காதல் கடிதமெல்லாம் எழுத ஆரம்பிச்சாச்சா?

எங்கெங்கு காணினும் காதலடா!

எனக்கும் இப்படியான அனுபவங்கள் உண்டு. ஒன்பதாம் வகுப்பில் ஜோடிப்புறா என நாங்க இரண்டு தோழிகள், பத்தாம் வகுப்பில் மூவராகி மும்மூர்த்திகள், முப்பெரும் தேவியர் எனப் பெயர் பெற்று பின் பதினோராம் வகுப்பில் அவர்களை விட்டுப் பிரிந்து வேறொரு தோழியர் குழுமத்தில் ஐக்கியமாகிப் பஞ்ச பாண்டவரில் அர்ஜுனன் என்ற பெயர் பெற்றதெல்லாம் நினைவில் வருது. :))))

எங்களோடும் இப்படி ஒரு பெண் கல்யாணம் ஆனவள், ஆனால் வீட்டுக்குத் தெரியாமல் முறை மாப்பிள்ளையையே கல்யாணம் செய்து கொண்டவள் இருந்தாள். அவளுடன் பழகும் பெண்களே தனியாக இருப்பார்கள். நாங்கல்லாம் அவளோடு பேசப் போனால், நீங்கல்லாம் குழந்தைங்க, இங்கே ஏன் வரீங்கனு அந்தப் பெண்ணே எங்களை விரட்டி விட்டுடுவாள். :)))) காதல் கடிதம்?? ம்ஹூம் சுட்டுப் போட்டால் கூட வராது எனக்கு!

ராமலக்ஷ்மி said...

தொடருங்கள் வல்லிம்மா:)! காத்திருக்கிறோம் அடுத்த பதிவுக்கு.

ராஜி said...

கடிதம் இன்னிக்கு இல்லியா?! சற்று ஏமாற்றம்தான்.., நான் போட்டிக்கான கடிதம்ன்னு நினைச்சு வந்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அய்ய ,கீதாம்மா ,சுட்டாலும் பேசவே வராது.காதல் கடிதம் எப்படி எழுதுவேன்?
அதுக்குத்தான் திட்டமெல்லாம் எல்லாம் சேர்ந்து போட்டோம். ஒருத்தி அன்பேனு ஆரம்பிப்பாள். சே தியாகராஜ பாகவதர் மாதிரி இருக்கும்.என்பாள் இன்னோருத்தி. கனகாவோ வாயே திறக்க மாட்டாள். சமாளிச்சோம். ஆனால் நீண்ட பதிவாச்சு.ஜாக்ரதை:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி.கடிதம் நாளையே:)

வல்லிசிம்ஹன் said...

ராஜிம்மா.

எனக்கு வராதுன்னு தெரிஞ்ச ஒரு விஷயத்தைப் பிரச்சினையாக்க விரும்பவில்லை.;)நாங்க எல்லாம் சேர்ந்து எழுதின கடிதம் பதிவாகும்.
கட்டுப் பெட்டித்தனமா இருக்கும்!

ஸ்ரீராம். said...

பத்தாம் வகுப்பு படிக்கும்போதே திருமணமா!
காதல் கடிதத்துக்கு முன்னுரையா!
ஐ அம் வெய்ட்டிங்!!!

வல்லிசிம்ஹன் said...

13, 14 வயதுக் காலங்களில் நிறையபெண்களுக்குத் திருமணம்
நடந்துவிடும்.பள்ளிக்கு வரமாட்டார்கள். இந்தக் கனகா பிடிவாதம் பிடித்து பள்ளிக்கு வந்தாள் ஸ்ரீராம்.

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா.... அந்த காலத்தைய காதல் கடிதமா.....

படிக்க ஆசை. இதோ பார்க்கிறேன்.....

கோமதி அரசு said...

உங்கள் பதிவை படித்த போது நான் திருமணம் ஆகி திருவெண்காட்டில் பள்ளியில் படித்த்து நினைவுக்கு வருகிறது. சக தோழிகள் என் கணவரைப்பற்றி என்னிடம் கேட்டு வம்பு செய்ததும் நினைவுக்கு வருகிறது.