Blog Archive

Tuesday, November 06, 2012

இனிய தீபாவளி 1972...3



புடவை ரவிக்கைத் துணியை எடுத்துக் கொண்டு மைதிலி உள்ளே வரவும் உதவி செய்யும் சாரதாப் பொண்ணு வரவும் சரியாக இருந்தது.
அப்பாடி  வீடு முழுவதையும் சுத்தம் செய்து விடலாம்.
மாடி அறையை விருந்தாளிகளுக்கு ஒழித்துவைத்துவிடலாம். கீழே இருக்கும் ஹாலில் தன் குடும்பத்துக்குப் போதும்.

விரைவாக  சாரதாவுக்கு ச்  சொல்ல வேண்டிய வேலைகளை விளக்கிவிட்டு

மாவு பிசையத் தொடங்கினாள். மாவு மெஷின்  மெயின் ரோடில் இருப்பதால் கேசவும் மாதவும் இரண்டு நாட்கள் முன்னாலயே அம்மா சொன்ன வேலைகளைச் செய்தது இப்போது சௌகரியமாகப் போயிற்று..

மனங்கொம்பு தயாரானதும்  ஒரு பெரிய பித்தளை  டப்பாவில்  போட்டு வைத்து  சமையலறைப் பரணில் வைத்தாள்.
மைசூர்ப்பாகும் செய்து வைத்துவிடலாம் .சுலபமாக முடியும் என்று நெய்யில் கடலைமாவை வறுக்க ஆரம்பித்தாள். வாசனைப் பிடித்துக் கொண்டே குழந்தைகளும் வந்துவிட்டார்கள். அம்மா பட்சணம் எங்க என்றதும்

ஞாயிறு செய்து வைத்திருந்த ஓமப்பொடியைக் கொடுத்துவிட்டு,''பசங்களா இப்போதைக்கு இதையும் பிஸ்கட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

அம்மா ராத்திரிக்கு  நல்ல முறு முறு தோசை வார்த்துக் கொடுக்கிறேன் என்றாள்.

அம்மா வேலை ஆச்சு என்று சாரதா வந்ததும் தான் அவளுக்கு இன்னும் தாவணி வாங்கவில்லை என்று நினைவுக்கு வந்தது.
இந்தா  டீயும்  பிஸ்கட்டும் எடுத்துக்கோ. கார்த்தால சீக்கிரம் வந்துடு. அத்தம்மா  எல்லாம் வராங்க என்றாள்.

அந்தப் பெண்ணும் சரிம்மா  வெள்ளென வந்திடறேன்  என்று வீட்டின் பின்பக்கம் சென்றது.
இந்தக் குழந்தைக்கு வாங்கிடணும். அவருக்கு வேஷ்டி வேற வாங்கணுமே
கையில்  இருக்கும்  30 ரூபாயில் எப்படிச் சமாளிக்கப் போறேன் பெருமாளேன்னு மனம் அரற்றத்தொடங்கியது.

அம்மா!  வாசலில் மீண்டும்  தபால்காரர்  குரல்.4 மணித்தபாலில்
இன்னோரு கடிதமா....என்னவாக இருக்கும்
என்று குழம்பியபடி  வெளியே வந்தாள்.
தபால்காரர்  முகமெல்லாம் சிரிப்பாக நின்று கொண்டிருந்தார். என்னம்மா தீபாவளி வீட்டுக்கு  வந்துடுச்சு போல இருக்கே. வாசனை அடுத்த தெருவுக்கே வருதே என்றபடி  கையிலிருந்த கட்டிலிருந்து  மணி யார்டர் தாள் ஒன்றை எடுத்தார்.
சட்டென்று தன் பெற்றோர் நினைவுக்கு வந்தார்கள் மைதிலிக்கு.
தபால்காரரின் கைகளையே பார்த்த வண்ணம் இருந்தாள். அவர் குறிப்பு எழுதிய சிட்டைக் கிழித்துக் கொடுத்து  அவள் கையில்   பத்து பத்து ரூபாய்த் தாள்களையும் ஒரு ஒரு ரூபாய் நாணயத்தையும் வைத்தார்.

அந்த ஒரு ரூபாய் நாணயத்தை அவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு
தீபாவளி  அன்று வாங்க போஸ்ட் மேன் என்று சொல்லிய வண்ணம் திரும்பியவளின் கண்கள்   நிரம்பியிருந்தன.
 **********************************************
அனைவருக்கும்  இனிய தீபாவளி நன்னாள்  வாழ்த்துகள்.
உறவுகள் பலம் பெற ஒற்றுமை  தழைக்க  இறைவன் அருளட்டும்.




 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

39 comments:

துளசி கோபால் said...

கையிலே காசு வந்துட்டால் புதுத்தெம்பு வந்துரும். அப்பாடா...... மைதிலிக்கு( ம்)கொஞ்சம் நிம்மதி.

இன்னொன்னு.... அப்பெல்லாம் ' தனக்கு மிஞ்சித்தான் தானதர்மம்' இல்லை போல!!!!!!

Anonymous said...

கதை பிரமாதமா இருந்துது. அந்த காலத்து தீபாவளியை அப்படியே மனசுல கொண்டு வந்துடீங்க. படங்களும் நல்லா இருந்துது. 'முராரி' அப்படின்னு பேர் வைப்பாங்களா? இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை, கதைகளிலும் படித்ததில்லை. போச்சம்பள்ளி எப்பவுமே எனக்கு மிகவும் பிடித்த டிசைன்.
அன்பு உள்ளங்கள் கொண்ட அழகான குடும்பம். அருமையா எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்!

வல்லிசிம்ஹன் said...

பின்ன இல்லையா துளசி:)
காசின் அருமை தெரிந்தால் தான் சேமிக்க முடியும்.

தனக்குனு எப்ப மிஞ்சறது,எப்ப தானம் செய்யறது.:)கதை அம்மா அப்பாவாழ்க்கையிலிருந்து கடன் வாங்கினது:) அப்பா தன் அலுவலக ஆட்களுக்கும் காலத்துக்கு ஏற்ற மாதிரி தன்னிடம் இருப்பதைக் கொடுப்பார்.
மாமியாரும் அப்படியே இருக்கிற நாலில ஒண்ணைக் கொடுத்தாக் குறைஞ்சு போயிட மாட்டொம்னு!!

ஸ்ரீராம். said...

முற்றுமா என்ன?

தீபாவளி, பொங்கல் போன்ற நன்னாட்களிலும், நவராத்திரி போன்ற போன்ற பூஜை தினங்களிலும் பெற்றவர்கள்,உடன் பிறந்தோர் அனுப்பும் இது போன்ற சீர் பணங்கள் சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிதென்று இருந்த காலம் ஒன்று உண்டு. அதே போல 1 ரூபாய் இலவசத்துடன் தபால்காரர் திருப்தியடைவது இப்போது ஆச்சர்யமாக இருந்தாலும், அதே ஒரு 1 ரூபாயில் நான் அப்போது ன்னென்ன செலவுகள் செய்து, மிச்சமும் கொண்டு வந்தேன் என்று நினைத்தால் இப்போது ஆச்சர்யம் வருகிறது. பெருமூச்சுதான்!

வல்லிசிம்ஹன் said...

வரணும் மீனாக்ஷி.

முரன் என்கிற அரக்கனைக் கொன்றதால கிருஷ்ணனுக்கு முராரி என்கிற பேரும் உண்டு.''கிருஷ்ணா,முகுந்தா,முராரே'' பாகவதர் பாட்டு.
இத்தனை அருமையா ரசித்துப் பாராட்டினால் இன்னும் கொஞ்சம் எழுதத் தோன்றும். மிக மிக நன்றிமா.

ராமலக்ஷ்மி said...

நல்ல மனதுக்கு நல்லது செய்ய வழி கிடைத்து விட்டது. எத்தனை குடும்பங்கள் இன்றளவிலும் இது போன்ற தவிப்புகளில்.

அருமை வல்லிம்மா.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பகிர்வு... வாழ்த்துக்கள் அம்மா...

வெங்கட் நாகராஜ் said...

கொடுப்பதற்கும் மனது இருந்தது அப்போது... இப்போதெல்லாம் பலருக்குக் கொடுக்க மனமே இல்லை!

தீபாவளி - 1972 - ஆம் வருட தீபாவளியை கண்முன்னே நிறுத்தியது. அப்ப எனக்கு ஒரு வயசு தான்.... அதுனால எங்க வீட்டுல என்ன நடந்ததுன்னு தெரியல! அம்மாகிட்ட கேட்கணும்.. :)

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான்ஸ்ரீராம்.
பிறந்த வீட்டுச் சீருக்கு எப்பவும் மதிப்புதான்.

கனுவும் கார்த்திகையும் அவர்கள் வந்தால் நிறைவு பெறும்.
நாமூM நம் உறவுகளுக்குக் கொடுக்கணும். அப்போதுதான் சர்க்கிள் பூர்த்தியாகும்.
நான் கல்லூரி ஒரு வருடத்துக்காக அப்பா அழகான புடவை சென்னைக்கு அனுப்பி இருந்தார்.
கூடவே கொண்டு வந்து கொடுப்பவருக்கு தீபாவளிக் காசாகபாட்டியிடம் கேட்டு வாங்கிக் கொடு என்று ஒரு சிட்டும் வைத்திருந்தார். அப்பா போஸ்ட் மாஸ்டராக இருந்ததால் தனக்குக் கீழ் வேலை பார்த்தவர்களின் பெருமை தெரியும்.அதை மிகவும் மதிப்பார். ஒரு ரூபாயில் சினிமாவுக்குப் போய் ஒரு கலரும் வாங்கிச் சாப்பிடலாம்:)

அப்பாதுரை said...

சட்டுனு ஒரு முப்பது வருஷம் பின்னோக்கிக் கூட்டிப்போன கதை. இந்த பாணி நெகிழ்ச்சிகளையும் தொலைந்து போனதில் சேர்க்க வேண்டியது தான்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ராமலக்ஷ்மி. இன்னும் தவிப்புகள் தொடராமல் இல்லை.நடுத்தர மக்களுக்கு
எல்லா விதத்திலும் சங்கடங்களும் சந்தோஷங்களும். இப்போது தனித்தீவுகள் ஆகிவிட்டோம்.
நன்றி கண்ணா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபலன் இனிய தீபவளி நல் நாள் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

நீங்கள் நெய்வேலியில் இருந்திருப்பீர்கள் சகோதரி இருந்திருப்பார். தங்கை பிறக்கவில்லை இன்னும். அம்மா நிறைய பட்சணம் செய்து இருப்பார்:)
அன்பு வெங்கட் இனிய வாழ்த்துகள் .இன்னும் திருச்சிக்கு ரயிலேறவில்லையா!!

வல்லிசிம்ஹன் said...

இல்லை தொலையவில்லை துரை.

இன்னும் உயிருடன் இருக்கிறது.நீங்கள் அங்கே இருப்பதால் தெரியவில்லை.
நெகிழ்ச்சிகளும் உண்டு.சங்கடங்கள்,கருத்துவேறுபாடுகள் எல்லாம் உண்டு.
தீபாவளியன்று கங்கா ஸ்நானம் ஆச்சா என்று எல்லோரையும் கேட்பதும் உண்டு.:)))

திவாண்ணா said...

முன்னே காசு அதிகமில்லை. உறவுகள் அன்பு இருந்தது. இப்பல்லாம் காசுக்கு குறச்சல் இல்லை. உறவு, அன்பு??? :-(

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் தம்பி வாசுதேவன். பணம் எல்லாவிதத்திலும் மனிதர்களை மாற்றிவிடுகிறது. அதைவிட
சுற்றுச் சூழல்,மற்றக் கவலைகள்,நம் குழந்தைகள் எத்தனையோ விதத்தில்
எல்லாம் மாறி இருக்கிறது. நேரம் இல்லை யாருக்கும்.
நம் பதிவுலகம் தவிர.!

ADHI VENKAT said...

அப்பாடா! பிறந்த வீட்டு சீர் வந்து மனதை குளிர வைத்து விட்டதா....

அம்மாவுக்கும் எல்லா மாமாக்களிடமிருந்தும் மணியார்டர் வரும். அப்போது முகத்தில் ஒரு ஒளிவெள்ளம் தான் வீசும்....

எனக்கும் அப்பா இருந்தவரை நாள் கிழமை தவறாமல் மணியார்டர் வரும். அதில் அப்பாவின் கையெழுத்தில் நலம் விசாரித்து நாலு வரிகள்...

சாந்தி மாரியப்பன் said...

அன்பு மட்டுமே பிரதானமா இருந்த அந்தக்காலம் பொற்காலம்தான்.

Geetha Sambasivam said...

இந்த மாதிரி எத்தனை தீபாவளி பார்த்திருப்போம் இல்லையா? பிறந்த வீட்டுச் சீராக வரும் பணமும் வீட்டுக்கே செலவிட்டிருக்கிறேன் நானும். மைதிலியைப் போல அப்போது பணம் வந்ததும் மனசு துள்ளிக் குதிக்கும். அப்பாடானு ஒரு நிறைவும் எட்டிப் பார்க்கும். இப்போவும் குறைவில்லாமல் வருது; ஆனால் அன்று தேவை இருந்ததால் அந்தப் பணத்துக்கான செலவுனு, எப்போ வரும், எப்போ வரும்னு காத்திருந்து காத்திருந்து போட்ட பட்ஜெட் எல்லாம் இப்போ இல்லை. நேரடியாக என்னிடமே வந்துவிடுகிறது. இதில் அந்த சந்தோஷம் கிட்டவில்லை. அப்பாதுரை சொன்னாப்போல் தொலைந்து போன சந்தோஷங்களில் இதுவும் ஒன்று.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஆதி. எங்க அம்மாவுக்கும் நான்கு சகோதரர்கள். அவர்கள் அம்மா இறைவனடி சேரும் வரை மறக்காமல் சீர் செய்வார்கள்.
அது தனி சுகம் தான்.

வல்லிசிம்ஹன் said...

எல்லாரிடமும் அன்பு இருக்கிறது சாரல். பகிர்ந்து கொள்ளத்தான் யாருக்கும் நேரம் இல்லை.

வல்லிசிம்ஹன் said...

அதுபோல நேரங்கள் எத்தனையோ.கார்த்திகைப் பணம் தீப எண்ணெய்க்குப் போகும்.
பொங்கல் பணம் வெண்ணெய்க்கும், எக்ஸ்ட்ரா செலவுக்கும் போகும். நல்லவேளை மஞ்சளிஞ்சி எல்லாம் நிறைய வாங்கி வருவார் அப்பா. அதையும் எடுத்துக் கொண்டு பஸ்ஸில்வரும் அந்த ஒல்லியான நெடிய உருவம் இன்னும் கண்ணில் நிற்கிறது:(
நீங்கள் சொல்வது போல இப்போது பணம் நம்மிடமே இருக்கிறது. அந்த அன்புதான் எங்கே.

sury siva said...

மைசூர் பாகு
ரவா லாடு
ரிப்பன் பக்கோடா,
தேங்குழல்,
காராபூந்தி
மிக்சர்
இத்தனையும் அந்த 1972 தீபாவளிக்கு செஞ்சது ஞாபகமிருக்கு.
தீபாவளி அன்னிக்கு கண்டிப்பா சேமியா பாயசம். ஆமை வடை.
போதாதற்கு எதித்த வீட்டிலேந்து பால் கோவா வந்தது நினைவு இருக்கிறது.
மனோகரம் தீபாவளி பக்ஷணமா !!
பருப்புத் தேங்காய் கூட்டிலே வைப்பார்களே ... அதத்தானே சொல்கிறீர்கள்.

ஹும்.... இப்பல்லாம் இத கண்ணாலதான் பாக்க முடியும்.
டேஸ்ட் வேணா கொஞ்சமா தொட்டு நாக்குலே வச்சுண்டு பாக்கலாம்.

1972 லே வயசு 30
2012 லே வயசு 70
இல்லயா ?

எல்லோரும் க்ஷேமமா இருக்கணும்.
எல்லோருக்கும் இந்த வலைப்பதிவு மூலமா
எங்களுடைய தீபாவளி வாழ்த்துக்கள்.

சுப்பு தாத்தா.
மீனாட்சி பாட்டி.

Ranjani Narayanan said...

ரொம்பவும் அருமையாகக் கதையை கொண்டு சென்றிருக்கிறீர்கள்...முற்பகல் நாம் நன்மை செய்யின் பிற்பகல் நமக்கு நன்மை கிடைக்கும்.

மைதிலியும், அவளது நல்ல மனசும் விஸ்வரூபமாக மனதில் பதிந்து விட்டது.

தீபாவளிக்கு முன் மனசு நிறைந்து ஒரு கதையைப் படித்த திருப்தி!

எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

வல்லிசிம்ஹன் said...

வரணும் சுப்பு சார். ஆமாம் பருப்புத்தேங்கய்க் கூட்டில் வைக்கும் அதெ மனோகரம்.பணியாரம் என்றும் சொல்வார்கள். இந்தவீட்டுப் பாட்டி செய்வார்.
அம்மாவீட்டில் மைசூர்ப் பாகு, தேங்காய் பர்ஃபி, மனங்கொம்பு,திரட்டிப்பால்,மிக்சர் உண்டு இரண்டு நாட்கள் தான் மும்முரமாகச் செய்வார். அந்தக் கால அடுப்பில் கடைசியாக லேகியமும் கிளறி வைப்பார். அவர் முகம் அலம்பி வேறு புடவைக் கட்டி வந்து பிறகுதான் பட்டாசு வெடிப்போம். அந்தி முடிந்து இரவு படுக்கப் போகும்போது கைகளில் மருதாணியும் வைத்துவிடுவார். இப்பொழுது அத்தனை பட்சணம் சாப்பிட அவசியம் இல்லையே.
சார். பார்த்தாலே போதும்.அவ்வளவுதான்:)

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ரஞ்சனி.இருப்பதை எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டால்தான் சந்தோஷம்.
எனக்கும் முற்பகல் பிற்பகல் நம்பிக்கை உண்டு.
இறைவன் எல்லாவிதமான நலங்களையும் நம் இல்லங்களில் வழங்கட்டும். மிகவும் நன்றிமா.சலிக்காமல் பின்னூட்டமிட்டுப் பெருமைப் படுத்திவிட்டீர்கள்.

மாதேவி said...

படிக்கும்போது அந்தக்கால தீபாவளி கண்முன்னே ஓடுகின்றது.

சுவையாகப் சொல்லியுள்ளீர்கள்.

இனிய தீபாவளி வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மாதேவி.உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நன்னாள் வாழ்த்துகள்.

இராஜராஜேஸ்வரி said...

அனைவருக்கும் இனிய தீபாவளி நன்னாள் வாழ்த்துகள்.
உறவுகள் பலம் பெற ஒற்றுமை தழைக்க இறைவன் அருளட்டும்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் ..///

இதைவிட உசத்தியாய் ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை ..

அருமையான தீபாவளிப்பதிவு ..!!

அப்பாதுரை said...

tradition இன்னும் தொடர்வது நல்ல செய்தி தான். தீபாவளி வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் துரை. நேற்று தம்பியும் மனையும் வந்து புடவை வேஷ்டி ஷர்ட் கொடுத்து இருந்து பேசிவிட்டுப் போனார்கள். நானும் அவர்களுக்குப் புடவை வேஷ்டி வைத்துக் கொடுத்தேன்.


இவர்கள் இங்கே வருவதற்காகவே இன்னும் திருநாட்கள் வரக்கூடாதா என்று ஏக்கம் வந்தது.
உங்களுக்கும் என் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள் அப்பா.

Subhashini said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்வல்லி மா.

Anonymous said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள்...

Avargal Unmaigal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

மாதேவி said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரெவெரி, வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றிமா. உங்கள் தீபவளியும் பிரகாசமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சுபாஷினி நன்றி அம்மா. அழைத்து வாழ்த்துகள் சொல்ல நினைத்து மறாந்துவிட்டேன் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக மிக நன்றிமா

@
அன்பு ராஜராஜேஸ்வரி உங்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் பதிவின் பின்னூட்டங்களே தீபாவளியைக் கொண்டாடிவிட்டன.

வல்லிசிம்ஹன் said...

நன்றி அவர்கள் உண்மைகள். உங்கள் வருங்கால தீபாவளிகளும் மகிழ்ச்சி போங்அ நடக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.