Saturday, January 13, 2018

மார்கழி 29ஆம் நாள், முப்பதாம் நாள் வாழி கோதை நாமம்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption
 29 ஆம்  பாசுரம். மிக முக்கியம் ஆனதும் கூட.
ஆண்டாள் திருவடிகளே  சரணம்.

பின் வரும் இரு பாடல்களும் தினசரிப் பூஜையில்  சாற்றுமுறைப் பாடல்களாகப்  பாடப்படும் எல்லோர்வீட்டிலும்.வைஷ்ணவ சம்பிரதாய முறைப்படி.
 எத்தனை ஏற்றம் ஆண்டாளின்  வார்த்தைகளுக்குத்தான்!!!
.பெண்ணாகப் பிறந்து தெய்வ அம்சமாக   இருந்தாலும் மனிதப் பிறவிக்கான அத்தனை   முயற்சிகளையும் செய்து,பக்தி வழியில் தானும் ஆட்பட்டு,கண்ணனையும் ஆட்படுத்தினாள்.
அவன்  அவளிடம்  தன்னைச் சிறை கொடுத்தான். அவள் அன்பில் பூத்த பாசுரங்களைப் பாமாலையாகச் சூடிக் கொண்டான்.
எத்தனை  தடவை அவள் சரித்திரத்தைப் படித்தாலும் கேட்டாலும் இந்த அற்புதம்   மெய்சிலிர்க்கவைக்கிறது.

மானிடர்க்கு வாழ்க்கைப் படமாட்டேன் என்ற திண்ணத்தோடு அரங்கனுடன் ஒன்றிய  மங்கை.
என்னிடம் இருக்கும் சொல்ப அறிவையும் புரிதலையும் வைத்துக் கொண்டு இந்த மார்கழி மாதத்தை
கோதையையும் கண்ணனையும்,வடபத்ர சாயியையும்,வேங்கடவனையும்,ஸ்ரீரங்கராஜனையும்
வழிபட வைத்தவளும் அவளே.

இதோ 29ஆம் பாடல்

சிற்றஞ்சிறுகாலே  வந்துன்னைச் சேவித்து  உந்தன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும்  குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே
இற்றை பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழு பிறவிக்கும் உந்தன்னோடு
உற்றோமே ஆவோம்  உனக்கெ நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர்  எம்பாவாய்!!
***********************************************************
30ஆம் பாசுரம்

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார்  சென்றிரைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண்டெரியல்   பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப்பரிசுரைப்பான் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்  எம்பாவாய்!!!
*******************************************************

ஹே மாதவா  பிரம்மமுஹூர்த்தம் எனப்படும் சின்னஞ்சிறு காலையில்
எழுந்து தூய்மையாகி  உன்னைச் சேவிக்கிறோம். சேவித்து உன்னிடம் விண்ணப்பிக்கும் வார்த்தைகளைக் கொஞ்சம் கேட்டருள்வாய்.

உன் பொன்னாலான தாமரையடிகளில் சேவித்து  வணங்கி இந்தப் பாசுரங்களைப் பாடும் பெருமை பெற்றோம்.
நாங்கள் ஆய்க்குலப் பெண்கள்.இடம் வலம் அறியாதவர்கள் .
எங்கள் நாயகனான நீ  எங்கள் குற்றங்களைப் பெரிதாக க் கொள்ளாமல்
உனக்குச் சேவகம் செய்யும்  புண்ணியத்தைக் கொடுத்தருளவேண்டும்.

இந்த வரத்தை மட்டும் நீ எங்களுக்கு அருளிவிட்டால் இன்னும் வரப் போகும் ஏழேழு பிறவிகளிலும்  உந்தன்னோடு   உற்றவராய் உன் அன்பிறு உரித்தானவர்களாக இன்புற்று இருப்போம்.
உன் பாத சேவை செய்யும்  பாக்கியம் பெற்றவர்களாவோம்.

மற்றபடி எங்களை வருத்தக்கூடிய ஆசாபாசங்களை விலக்கி உன் சரணே திண் சரண் என்று இருக்க நீயேதான் அருளவேண்டும்.**
*******************************************************************
இதுவரைத் தன்னையும் தோழியரையும்  ஆய்ப்பாடிக் கோபியராகவே நினைத்து கண்ணனைத் தொழுது நின்று   பிரார்த்தனை செய்த ஆண்டாள் எனும் நம் கோதை,
இந்தக் கடைசிப் பாசுரத்தில் திருப்பாவை நோன்பின் மகிமையையும்
அதன் பலன்களையும்  உருகி உருகி  விவரிக்கிறாள்.

திருப்பாற்கடலைக் கடைந்த கோவிந்தனை,கேசவனை,மாதவனைத் தேடிச் சென்று இந்த அழகிய திருவில்லிபுத்தூர்ப் பெண்கள் நோற்ற நோம்பின் மகிமையை என்ன சொல்வது!!
அவனை இறைஞ்சி,சேவித்து  பரிசுப் பொருளாகத் தீராத,அழியாத
அவன் பாத சேவகத்தைக் கேட்டுப் பெற்றோம்.
இவ்வாறு  பாடிய பாவையோ அழகிய  பெரிய   மாலையைச் சூடிய பொற்கொடி  கோதை நாச்சியார்.
பட்டர்பிரான்  ஸ்ரீ விஷ்ணு சித்தரின்   குலப்பாவை.அவர் பெற்ற செல்வம்,
இந்தப் பாடலில் தன் தகப்பனாரையும் மாலையில் சேர்த்துக் கொள்கிறாள்.
அவர் சொன்ன பிரபந்தங்களை கேட்டு வளர்ந்தவள் அல்லவோ.
அவள் சொன்ன  சங்கத்தமிழ்ப் பாடல்கள் முப்பதையும் தப்பாமல்
பாடுபவர்கள், செவ்வரியோடிய கண்களால் அருளுபவன் திருமால்,
நான்கு  கரங்களில் சங்கம் சக்கரம்,சார்ங்கம்,நந்தகம்,தாமரை என்ற் வன்மை மென்மை கலந்த ஆயுதங்களையும் அருளை வழங்கும் அபயக் கரங்களோடு காட்சி தருபவன்.

அவன்  எப்பொழுதும் நம்மைக் காப்பான்.
அவனை நாம் மறந்தாலும் அவன் நம்மை மறக்கமாட்டான்.
அன்று சொன்னாளே ஆண்டாள். .அவள் சொன்ன வார்த்தையை
நான் மறப்பேனா.
நானே மறந்தாலும் அவள் என்னை மறக்க விடுவளோ.
என் இருதயத்தில் வசிப்பவள்.ஒரு சிறிய புருவ அசைப்பினாலேயே
என்னை அணைத்துப் பக்தர்கள் அடியவர்கள் பக்கம் திருப்பிவிடுவாள். நான் என்றும்  அடியவர்களைக் காப்பேன் என்று அவளுக்கும்
வாக்களிக்கிறான்.
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவோம்.

திருவாடிப் பூரத்துச் ஜகத்துஉதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள்  வாழியே
பெரியாழ்வார்   பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்துமூன்றுரைத்தாள்  வாழியே
உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருவல்லி வளநாடு வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே!!!!!!

ஸ்ரீவிஷ்ணு சித்தர் பாதங்களில் சரண்.
ஸ்ரீராமானுஜ  முனியின் பாதங்களிலும் சரண்.

தீப மங்கள ஜோதியாய்  நம்மை எப்பொழுதும்
நமக்குப் பகவானை அடைய  வழிகாட்டும் எம் தோழியே
ஆண்டாளே  மீண்டும் மீண்டும் உன்னை வணங்குகிறேன்.
தாயே சரணம். அன்புடை மணவாளனோடு மகிழ்ந்திருப்பாய்
எங்கள் கோதையே நீ!


Friday, January 12, 2018

.அம்பி மன்னி, எங்கள் குடும்பம்..6

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1996க்குப் பிறகு சீனிம்மாப் பாட்டியின் உடல் நலம் அவ்வளவாகச் சரியில்லை.
மாப்பிள்ளை பகவான் திருவடி அடைந்தது வெகு வாகப் பாதித்தது.
என்னைப் பொறுத்த வரை உலக அழகிப் பட்டம் அவருக்குத்தான் கொடுப்பேன்.
அடுத்தாற்போல் என் அம்மாவும் ,மன்னியும்.

1998இல் எங்கள் பேரன் பிறந்த பொழுது சென்னை வந்து, உடனே
அம்பி மாமாவுடன் இருந்த பாட்டியைப் பார்க்கத்தான் போனோம்.
ஜெயா மன்னி, குழந்தையை மடியில்
வைத்துக் கொஞ்சியது இன்னும் மனக்கண்ணில் இருக்கிறது,.
வாழ்க்கையில் எத்தனை சவால்களைச் சந்தித்திருக்கிறார்.

அசரவில்லையே. அம்பிமாமாவைத் தன் அரவணைப்பினாலேயே
 துணை நின்று,வாழ்க்கையை நடத்தியவர்.
ஒரு சமயம் நினைவுக்கு வருகிறது.
தி.நகர் தபால் அலுவலகத்தில் தன் பென்ஷனைப் பெற்றுக் கொண்டு, பெருங்களத்தூர்
திரும்பிய,மாமாவின் மொத்தப் பணமும்
பறி போனது.
மாமாவுக்கு இருந்த அசதி,அதிர்ச்சி கூட மன்னி, பாதித்ததாகக் காண்பித்துக் கொள்ளவில்லை.
இதுக்கு மேல ஒண்ணும் நடக்கலை.
அதுதான் பெரிய விஷயம்.
சம்சாரம் தானே நடக்கும் என்றார்.
இந்த உறுதுணை தந்த ஆறுதலில் அம்பிமாமாவின் குடும்பம் நடந்தது.
அம்பி மாமா ஒரு சொந்தத்தையும் விட்டுவிட்டார் என்ற சொல்லே கிடையாது.
அவருடன் நான் பேசும்போது எல்லோரையும் பற்றி விசாரிப்பேன்.
தில்லியில் அவர் செய்த பத்ரி பயணங்கள் எண்ணிலடங்காதவை.
என் அம்மா அப்பா தில்லி சென்றபோது, அவர்களையும்
அழைத்துக் கொண்டு பயணித்ததை அம்மா சொல்லிக் கொண்டே இருப்பார்.
மறக்க முடியாத பயணம் அது அப்பாவுக்கும்.
அம்பி மாதிரி யார் பத்ரி விஷால் சொல்ல முடியும்
என்று வியப்பார்.

மார்கழிப் பாவை 28 ஆம் நாள் பாசுரம் கறவைகள் பின் சென்று

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

   கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
   அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்துன் தன்னைப்
பிறவிப் பெருந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது,
  அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.//
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே  சரணம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 27 ஆம் நாள் சர்க்கரைப் பொங்கல் செய்து கண்ணனுக்கு அமுது
படைத்துக் களித்த கையோடு,
அடுத்த நாள் கண்ணனோடு கானகம் செல்ல
ஆவல் தெரிவிக்கிறாள்.
கண்ணனிடம் தன் பிரார்த்தனை செய்கிறாள்.
கண்ணா, நீயும் ஆய்க்குலத்தில் பிறந்தவன்.
நாங்களும் ஆய்க்குலத்துப் பெண்கள்,இடம் வலம் தெரியாதவர்கள்.
ஆனால் உன்னை எங்களுடன் இருக்கச் செய்த பாக்கியம்
பெற்றவர்கள். 
குறையே இல்லாத கோவிந்தா, உன்னால் நாங்கள் நிறைவு 
பெறுகிறோம்.
அறியாமையால் உன்னை அழைக்கத்தெரியாமல் ஏதோ 
சிறு பேர் சொல்லிக் கூப்பிடுகிறோம்.
 நீதான் எங்களுக்குப் பறையான பரிசைத்தரவேண்டும். 
மோக்ஷ சாம்ராஜ்யத்தைக் கொடுக்கவேண்டும்.

இன்றைய அமுது,கண்ணனுக்கு உகந்த தயிரன்னம்.
அதுவும் எப்படி செய்ய வேண்டுமாம் தெரியுமா.
பாலில் சமைத்த அன்னத்தில் துளித் தயிரால் 
உறைகுத்தி, மூன்று மணி நேரத்தில் 
அது தயிரன்னமாக ஆகிவிடுமாம்.
அதில் பழங்களை நறுக்கிச் சேர்த்து, பாதாம்,முந்திரிபருப்பு ,திராட்சை
 சேர்க்க வேண்டுமாம். எவ்வளவு சாதம் இருக்கிறதோ
அவ்வளவு வெண்ணெய் சேர்த்துப் பிசைய வேண்டுமாம்.
 எல்லோரூம்  ததியன்னம் படைத்துப் பெருமை பெறுவோம்.
..

Thursday, January 11, 2018

மார்கழி 27 ஆம் நாள் பாவைப் பாசுரம்,கூடாரை வெல்லும்

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
https://youtu.be/ibrOG5KG8_0

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா/உன் தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடுபுகழும் பரிசினில் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பால் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர்  எம்பாவாய்.
பாசுரம் 26 இல்  மோக்ஷத்தை நீ எங்களுக்குத் தரப் போகிறாய்
என்றூ வேண்டிக்கொண்டவள்,
27 ஆம் பாசுரத்தில்  கண்ணன் அருகாமையில் அனுபவிக்கிறேன் என்று சொல்லுகிறாள்.
அவள் கேட்பதெல்லாம் கண்ணன் தருவதோடு மட்டுமல்லாமல்
அவனும் நப்பின்னையும் , இவர்களுக்கு நீராட்டம் செய்வித்து, அவர்கள்
உடுத்திகளைந்த பீதக ஆடைகளை
இவர்களுக்கு உடுத்திவிட்டு, காதுக்குத் தோடும் செவிப்பூவும், கால்களுக்குப்
பாடகமும்,கைகளுக்கு வளயல்களும் அணிவித்து விடவேண்டுமாம்.
அதன் பின் அவனுடன் அனுபவிக்கும் ஆனந்தமான
பாற் சோறு.
அதில் கலந்த நெய் உருகிக் கைகளில் வாங்கும்போது
முழங்கை வரை வழிகிறதாம்.
இந்த அனுபவத்தை அவனுடன் கூடாதோர் அனுபவிக்க
முடியாது.
இவர்கள் அவனுடன் கூடி இருந்து குளிரக் குளிர அனுபவிக்கப் போகிறார்கள்.
பாவை இரண்டாம் பாசுரத்தில் எல்லாவற்றையும் விலக்கியவள்,
27 ஆம் பாசுரத்தில் கண்ணன் தரிசனம் பெற்றதும் அத்தனையையும் அனுபவிக்க
அவன் கூட இருக்கும்போது மகிழ்கிறாள்.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே  சரணம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அம்பி,மன்னி எங்கள் குடும்பம் 5

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

   அம்பி,மன்னி எங்கள் குடும்பம் 5
+++++++++++++++++++++++++++++++++++++++++++
1965 இல் என் சென்னை படிப்பு பியுசியுடன் நின்றது.
மதுரைக்கு வந்துவிட்டேன். என் நாட்கள் கடிதங்கள் எழுதுவதிலும், படிக்க
விட்டுப்போன புத்தகங்கள்  படிப்பதிலும் கழிந்தன.
என் தோழமை குழுவில் அம்பி மாமாவும் ஒருவர்.
தபால் அலுவலகத்தோடு வீடு இருந்ததால்
இன்லாண்ட் கடிதம் வாங்குவது எளிதாக இருந்தது. தில்லிக்குப் பறக்கும்
கடிதங்கள் என் விருப்பங்கள்,படிப்பு இவற்றைச் சுற்றி இருக்கும். மன்னியும் அம்பியும்
என்னை உற்சாகப் படுத்தி  இன்னும் எழுதத் தூண்டுவார்கள்.

அவர்தான் என்னை மும்பையிலிருந்த ஒரு கல்விக்கூடத்துக்கு

எழுதிபோட்டு ஜர்னலிசம் படிக்கும்படி  அறிவுறுத்தினார்.
அதற்குப் பின்னர் நடந்தது எல்லாம் கடவுள் எண்ணம்.
திருமணத்துக்கு வந்த அம்பி மன்னிக்கு 6 வயது மகனும்,
மூன்று வயது பெண்குழந்தையும் எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டனர்.
சின்னப் பெண் இந்து அந்த நாளைய செலுலாய்ட் பொம்மை
போல இருப்பாள். மழலையில் குப் சிப்,குப் சிப் என்று ரயில்
போகும் சப்தத்தை, இரண்டு குட்டிக் கைகளைக் குவித்து வைத்துக் கொண்டு,
இளம் ரோஜா போல வாயைக் குவித்து சொல்வது இன்னும் மனதில்
 இருக்கிறது. திருமண ஆல்பத்தில் கூட அந்தப் படம் இருக்கும்.

மன்னிதான் என் திருமணத்தோழி.
சிங்கத்துடன் பேச அவருக்கு மட்டும் சலுகை இருந்தது.
எங்களகத்து  Fairlady ,inimEl unga Fairlady என்று அவரிடம் சொன்னார்.
சிங்கமும் சிரித்துக் கொண்டது. உங்கள் வீட்டுக்கு நீ ரொம்பச் செல்லமோ
 அன்று மாலை வரவேற்பின் போது கேட்டார். அதிலென்ன சந்தேகம் என்று
பெருமைப் பட்டுக் கொண்டேன்.
அன்று என்னை என் வருங்கால வீட்டில் கொண்டு விடும்போது,
மன்னி,அம்மா,அம்பி எல்லோர் கண்களிலும் நீர்.
  1968இல் சேலத்தில் எங்கள் இரண்டாவது பெண் பிறக்கும்போது அம்மா
உதவிக்கு வந்திருந்தார்.
கோவைக்குத்தன் சித்தி பெண்,மாப்பிள்ளையைப் பார்த்த கையோடு ,மாமா
 திடீரென்று சேலத்துக்கும் வந்தார்.
வெறும் கைகளொடு வர அவருக்குத் தெரியாது.
அருமையான கடாவ் வாயில் புடவை, ஏகப்பட்ட பழங்கள் பூ எல்லாம் கொண்டு வந்து என் மாமியாரை
அசத்திவிட்டார். ஒரே ஒரு வேளை இருந்து, சாப்பிட்டு விட்டு அக்காவுடன் வேண்டும் அளவு பேசிவிட்டுக் கிளம்பி விட்டார். தன் மூன்றாவது மகள் பற்றி ஒரே பெருமை.
 அதே போல எனக்கு மூன்றாவது மகன் பிறக்கும்போது காரைக்குடிக்கும் வந்தார்.
அவன் பிறந்த 7,8 நாட்களில் மாமா,மன்னிக்கு நான்காவதாகப்  பெண் பிறந்தது.
எங்கள் அனைவருக்கும் ஏகப்பட்ட சந்தோஷம்.
இந்த இரண்டு பெண்குழந்தைகளும் இப்போது என் உயிர் நாடிகள் போல அன்பு வைத்துக் கொண்டாடுகிறார்கள்.
கனிவுள்ளம் படைத்த பெற்றோருக்குப் பிறந்தவர்கள் அல்லவா.
இருவரின் வருத்தத்தைத் துடைப்பது முடியாத காரியமாக இருக்கிறது.
மறக்க முடியாத அங்கமாக அம்பி மாமா,மாறிய நேரம் ,என் தம்பி திடீரென
இறைவனடி சேர்ந்த போது.   அதைப்பிறகு பார்க்கலாம்.

Wednesday, January 10, 2018

மார்கழிப்பாவை 26 ஆம் பாசுரம் மாலே மணிவண்ணா..

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption
 மார்கழிப்பாவை 26 ஆம் பாசுரம்  மாலே மணிவண்ணா..
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தைஎல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன்  பாஞ்சஜன்யமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே
  கோலவிளக்கே  கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 முந்தைய பாசுரத்தில் உன்னையே தருவாய் என்று கேட்ட
கோதையிடம் ,இன்னும் என்னவெல்லாம் வேண்டும்
என்று கேட்கிறான்.இந்தக் குழந்தைகளைப் பார்த்து அவனது
 உள்ளம் உவகையில் லயிக்கிறது.
 ஆர்வத்துடன் பட்டியல் இட்டுக் கேட்கிறாள்,.
திருமாலே மணிவண்ணா அழகிய ரூபத்தால் எங்களை ஈர்த்து
உன் சௌலப்ய குணத்தால் ஆலிலைப் பெருமாளைப் போல
எங்களுக்கு வைகுண்டப் பிராப்தியும் கொடுக்கப் போகிறாய்.
இப்பொழுது எங்கள் மார்கழி நீராட்டம், வீதி தோறும்
உன்னைப் பாட, தலைக்கு மேல் ஒரு விதானம், கைகளில் ஏந்த விளக்குகள்,
நாங்கள் வருகிறோம் என்று அறிவிக்க ஒவ்வொருவருக்கும்
பாலன்ன வண்ணத்து வெண்சங்கங்கள், கருடக் கொடி,ஒரு பெரிய பேரி முழக்கம் செய்யும் பறை
எல்லாம் வேண்டும் என்கிறாள்,
இதை எல்லாம் எந்த சாஸ்திரம் பார்த்துக் கற்றாய் என்று கேட்கிறான்
கோவிந்தன்.
நீ இருந்த ஆயர்ப்பாடிக் கோபிகைகள் செய்த அதே நோன்புதான்
எங்களுக்கு மேலையார் சொன்னது என்று பதில் சொல்லி
அருள் செய்வாய் என்று வணங்குகிறாள்.
 ஸ்ரீ கோதை நாச்சியார் திருவடிகளே சரணம்.

Tuesday, January 09, 2018

என்றும் ஆள்பவள் ஆண்டாள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
  ஸ்ரீ கோதை நாச்சியார் , மனித வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவர்.
எல்லாமே வரலாற்று சம்பவமாக்ப் பதிந்திருக்கின்றன.
  இதில் யாரோ ஒருவர் அப்பழுக்குச் சொன்னர் என்றால் வருந்த வேண்டியது நாம் அல்ல. அவளிடம் தீரா பக்தி செலுத்தும் குடும்பங்கள் ,அதில் பிறந்தவர்கள் என்று பார்க்கும்போது,
 
இதெல்லாம் தீயினில் தூசாக வேண்டிய மொழிகள்.


பழைய சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. நாங்கள் சேலத்தில் இருந்த நேரம். அம்மா வீட்டிலிருந்து 3 மாதக் குழந்தையையும்,அவள் அண்ணனையும், என் தம்பி ,மற்றும் என் கணவரோடு ஒரு வண்டியில் சேலம் நுழைகிறோம்.

திடீரென் கறுப்புக் கொடிகளோடு ஒரு ஆரவாரக் கும்பல். என் வாழ்க்கையில் அதுவரை பார்த்திராத பெரிய பெரிய ராமர்,சீதை,லக்ஷ்மணன் பிம்பங்கள். அடுத்த காட்சி உறைய வைத்தது. அவர்கள் கழுத்தச் சுற்றி செருப்புகளால் மாலைகள்.
கெக்கலிக்கும் கோஷங்கள்.
கணவரே பிரமித்துப் போனார். குழந்தையோடு குனிந்து கொள்.
ரங்கா அவர்களைப் பார்க்காதே. என்ற வண்ணம் வண்டியை
லாவகமாக ஒடித்து வேறு சந்து வழியாக வெளி வர வழி செய்தார்.
இன்னும் பசுமையாக அந்த அலங்கோலம் நினைவை விட்டு அகலவில்லை.
 இது நடந்து 48 வருடங்கள் ஆகிறது.

இந்த நிகழ்ச்சியை பின்னர் ,என் மாமனார் வந்திருந்த போது,
மனிதர்கள் செய்யும் எந்த மாற்று நிகழ்வும் பகவானைத் தொடாது.
என்று விளக்கிச் சொன்னார்.
அதே போல இப்போது நடந்திருக்கும் சொற்பொழிவு.

 இதற்குப் பதில் சொல்ல நேரம் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
உலகத்தைக் காப்பவர்களுக்கு, நாம் அரண் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
காலம் பதில் சொல்லும்.

மார்கழிப் பாவை 25. ஒருத்தி மகனாய்ப் பிறந்து

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 மார்கழிப் பாவை 25. ஒருத்தி மகனாய்ப் பிறந்து
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தருக்கிலானாகித் தான் தீங்கு நினைத்தக்
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றினில்
நெருப்பென நின்ற நெடுமாலே..ஊண்ணாஈ
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++ கண்ணனின் பிறப்பு
மகிமையை ஆண்டாள் நினைத்து நினைத்து மகிழ்கிறாள்.
 இதோ கண்ணெதிரே கோவிந்தன் கம்பீரமாகச் சிங்காதனத்தில் அமர்ந்திருக்கிறான்.
கண்குளிரக் கடாக்ஷிக்கிறான்.
எதை எதிர்பார்த்து என்னைக் காண இத்தனை சிரமம்
எடுத்துக் கொண்டீர்கள் என்று கேட்கிறான். உங்களுத்தேவை என்ன என்று
வினவுகிறான்.
 உன்னையே பரிசாகத் தேடி, விழைந்து வந்திருக்கிறோம் கண்ணா.
 அன்னை தேவகியின் வயிற்றில் உதித்து உன்னை,
கம்சனுக்குப் பயந்து  யசோதை அகத்தில்
ஒளித்து வளர்த்தனர்..
நீ உயிரோடு இருப்பதையே
பொறுக்க முடியாத கம்சன் பல்வகை அசுரர்களை ஏவி உன்னை அழிக்க முயற்சித்தும்
அவனால் முடியவில்லை.
அவனைக் கனவிலும் நினைவிலும் தகித்து வந்தாய்.
கடைசியில் நேருக்கு நேர் யுத்தத்தில்  அவனை.
 முடித்து வைத்தாய்.
உன்னையே வேண்டி எங்கள் வாழ்வின் அர்த்தமாக நினைத்து வந்திருக்கிறோம்.
அந்தப் பரிசை நீ எங்களுக்குத் தந்து அருள்.
எங்களுக்குக் கிடைத்த செல்வத்தைப் பாடிப்பாடி மகிழ்வோம்
என்று பூர்த்தி செய்கிறாள்.
நம் வாழ்வின் அர்த்தமும் கண்ணனாகவே இருக்கட்டும்.

Monday, January 08, 2018

மார்கழி 24 ஆம் நாள் போற்றி.போற்றி.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 பெரியாழ்வார் பெற்றெடுத்த  பெண்பிள்ளை வாழியே 
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்றிவ்வுலகம்  அளந்தாய்  அடி  போற்றி 
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்  போற்றி.
பொன்றச் சகடம்  உதைத்தாய்  புகழ் போற்றி 
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி.
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி 
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி 
என்றென்றும் உன் சேவகமே ஏறிப் பறை கொள்வான்
 இன்று யாம் வந்தோம் இரங்கேலோர்  எம்பாவாய்.

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
+++++++++++++++++++++++++++++++++++++++
 கண்ணன் நடந்து வந்ததை பார்த்த பாவைகளுக்கு 
ஆஹா இந்தச் செந்தாமரைப் பாதங்கள் நடந்தது போதாதா.
நமக்காக வேறு நடந்துவிட்டானே என்று ஆதங்கம் தோன்றிவிட்டதாம்.
உடனே  கோதை அந்தப் பாதங்களுக்கு மங்களாசாசனம் செய்யும் முறையாகப் போற்றி சொல்ல ஆரம்பிக்கிறாள்.

முதலில்  வாமன் திரிவிக்கிரம  அவதாரத்தை போற்றுகிறாள்.
 இரண்டாவது  அயோத்தியிலிருந்து  தென்னிலங்கை வரை நடந்த  இராமன் பாதங்களை போற்றுகிறாள். 

அந்த  ராமனாவது வளர்ந்த பிறகு  நடந்தான் இந்தக் கண்ணன் குழந்தையாக இருக்கும்போதே சகடாசுரனை உதைத்தவன் ஆயிற்றே  என்று கேசவனைப் போற்றுகிறாள்.

இரண்டு  அசுரர்களை ஒரே நொடியில் ஒழித்தவன்.
ஏழு வயதுக்கு குழந்தையாக இருந்த பொது 
கோவர்த்தன கிரியைத் தூக்கிப் பிடித்து தன மக்களைக் காத்தவனைப் போற்றுகிறாள்.

இத்தனை திறலுக்கும்  காரணமான  உன் கையில் இருக்கும் வேலுக்கும்  போற்றி போற்றி என்று  வணங்குகிறாள்.
உன் வீர தீர பராக்கிரமங்களை பாடவே நாங்கள் 
வந்திருக்கிறோம்.
நீ அருள் செய் என்றும் இறைஞ்சுகிறாள்.

நாமும் கோவிந்தனைப் பாடுவோம்.


Sunday, January 07, 2018

இன்று திருப்பாவை 23 ஆம் நாள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

இன்று திருப்பாவை  23  ஆம் நாள். சீரிய சிங்காசனத்தில் இருந்து 
யாம்  வந்த  காரியம்  ஆராய்ந்து  அருளச் சொல்கிறாள்..

 ஆண்டாளுக்கு கண்ணனின்  நடையழகு பார்க்க வேண்டுமாம்.
பாலும் சர்க்கரையும் சேர்ந்தது போலவாம் நரசிம்ஹ அவதாரம்.
நரனும் சிங்கமும் கலந்த அழகனாம்.

அவன் தீவிழித்துப் பார்ப்பது, கொடியவர்களை வீழ்த்த.
ஹிரண்யனை வீழ்த்தும் பார்வை. ராவணனை
அதிர வைத்த பார்வை.
துரியோதனன் சபையில்   கண்ணனை அவமதிக்கக்
காத்திருக்கிறான்.
கண்ணன் உள்ளே   நுழைகிறான். யாரும் எழுந்திருக்கவில்லை. அரசனுக்குப்
பயந்து.
கண்ணனின் கண்ணைப் பார்த்த அடுத்த கணம் துரியோதனனின் உடல் எழுந்துவிட்டதாம்.

அதனால்  அடியவர்களாகிய நாம்,சிங்கம் என்று பயப்படவேண்டாம்.
அது சீரிய சிங்கம்.
ஆண்டாள் பாவைக்காக இத்தனை நாள்     மாய உறக்கத்தில் இருந்த சிங்கத்தின்  உறக்கம் கலைந்து விழித்ததாம்.
இவர்கள் வந்துவிட்டார்கள்  என்று தெரிந்ததும் தாமரைக் கண்கள் சிவந்து விரிந்தனவாம்.
அடியவர்கள் அருகில் இருந்தால் பகவானின் கண்கள் தாமரைச் சிவப்பு கொள்ளுமாம். அவர்கள் சற்றே அகன்றாலும் அவர் கண்கள் வெளுத்துவிடுமாம்.!!

பூவைப் பூ வண்ணா,நீ உன் சிம்ம கதியில் நடந்து வந்து
எங்களுக்கு அருள வேண்டும் என்று சொல்லிவிட்டுப்  பிறகு சொன்னோமே என்று  வருந்தினாளாம்.

இந்தக் கண்ணன்  நடந்த நடை போதாதா. நான் வேறு நடக்கச் சொல்லிவிட்டேனே.

இந்தப் பாதங்களை குளிர்சந்தனம்  பூசிப் பூஜிக்க அல்லவா வேண்டும்.
என்று   உணர்ந்து அடுத்த பாசுரத்தில்(அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி ) போற்றிப் பாடுகிறாள்.

இன்றைய பாடல்

மாரிமலை முழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய  சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா  போல நீ பூவைப் பூவண்ணா உன்
கோவில் நின்று இங்கனே  போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காதனத்திருந்து  யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோ எம்பாவாய்.!
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்